×

பேருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்கலாம்: முன்னாள் போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி கருத்து

சென்னை: பேருந்து தட்டுப்பாட்டை தவிர்க்க தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்கலாம் என முன்னாள் போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி கருத்து தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்களிக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு கடந்த 21 மற்றும் 22ம் தேதி பயணம் மேற்கொண்டனர். தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்கள் போல லட்சக்கணக்காணோர் தங்களின் வாக்கினை செலுத்த கூட்டம் கூட்டமாக படையெடுத்து சென்றனர்.

இதற்காக சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்து சேர்த்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் போன்ற பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்பட்டன. பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் போக்குவரத்து துறை தரப்பில் செய்யப்பட்டிருந்தாலும் கூட்டத்தின் மிகுதியால் ஏராளமானோர் நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராமல் பயணிகள் தவித்ததால் சில இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களிலும் குதித்தனர்.

இதனால் பேருந்து நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்ட பேருந்துகளை காட்டிலும் கூடுதலாகவே பேருந்துகளை இயக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்த சம்பவம் சமூகவலைதளத்தில் பேசும் பொருளாக மாறிய நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் போக்குவரத்து துறை செயலாளராக இருந்த பணீந்திர ரெட்டி தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இதுபோன்ற அதிகப்படியான பயண தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. இதனை சரி செய்ய அரசு தனியார் பேருந்துகளை ஒப்பந்தம் அடிப்படையில் வாடகைக்கு எடுத்து இயக்குவது சேவையின் தேவையை பூர்த்தி செய்ய உதவும். அதேபோல், தெற்கு ரயில்வேயும் இதுபோன்ற நேரங்களில் தங்களின் பங்களிப்பை முழுமையாக அளிப்பது அவசியமாகும். பொதுமக்களும் தங்களின் பயண திட்டத்தை முன்பே திட்டமிட்டு செல்வது இதுபோன்ற இன்னல்களை தவிர்க்க முடியும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Former Transport Secretary ,Panindra Reddy ,Chennai ,Tamil Nadu Assembly ,
× RELATED பார்சன்ஸ்வேலி பகுதியில் ஏற்பட்டுள்ள...