×

சென்னையில் இருந்து ஓட்டு போட நெல்லைக்கு ஸ்கூட்டரில் சென்றபோது கார் மோதி டைரக்டர் பலி: மனைவி, மகன் படுகாயம்

களக்காடு: சென்னையில் இருந்து ஓட்டு போட நெல்லைக்கு ஸ்கூட்டரில் சென்ற சினிமா இயக்குனர் கார் மோதி பலியானார். அவரது மனைவி, மகன் படுகாயமடைந்தனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (45). திரைப்பட இயக்குனரான இவர் தற்போது பந்து என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். கடந்த 22ம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஓட்டு போடுவதற்காக அதிகாலை கிளம்ப திட்டமிட்டிருந்தார். ரயில், பஸ்சில் இடம் கிடைக்காததால் மனைவி பேச்சியம்மாள் (35), 7 வயது மகனுடன் சென்னையில் இருந்து ஸ்கூட்டரில் 22ம்தேதி அதிகாலை புறப்பட்டார்.

ஜெயபாலன் மனைவி சொந்த ஊர் ராதாபுரம் அருகே கஸ்தூரி ரெங்கபுரம். எனவே முதலில் மனைவியை அங்கு சென்று விட்டு விட்டு நாங்குநேரி தொகுதி மன்னார்புரம் வர முடிவு செய்தார். 23ம்தேதி அதிகாலை நாங்குநேரி அருகே வாகைகுளம் ரோட்டில் வலதுபுறம் ஓரமாக ஸ்கூட்டரை நிறுத்தி மூவரும் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஜெயபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மனைவி, மகனை போலீசார் மீட்டு நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Nellai ,Jayapalan ,Mannarpuram ,Vetiyaanvilai ,Nellai district ,
× RELATED விளைச்சல் இருந்தும் விற்பனைக்கு...