×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தொடங்கிய பத்மாவதி பரிணய உற்சவம்

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள நாராயணகிரி பூங்காவில் பத்மாவதி சீனிவாச பரிணயம் எனப்படும் திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் முதல் நாளான இன்று மலையப்ப சுவாமி வாகன மண்டபத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட தங்க யானை வாகனத்தில் மாடவீதி வழியாக ஊர்வலமாக சென்று நாராயணகிரி பூங்காவை வந்தடைந்தார். உடன் தேவி, பூதேவி தாயார்கள் தங்கப் பல்லக்கில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து, பூங்காவில் மணப்பெண்களை பார்த்து பெருமாள் முதலில் மாலை மாற்றினார்.

பின்னர் சம்பிரதாயப்படி பட்டுப் புடவைகள், சீர்வரிசை வழங்கி, வேத மந்திரங்கள் முழங்க திருமண மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது, பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மல்லிகை மலர்களால் செய்யப்பட்ட பந்துகளை ஒருவர் மீது ஒருவர் வீசி திருக்கல்யாண சம்மதம் தெரிவித்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமி ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் செயல் அதிகாரி ரவிசந்திரா, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்திரி, துணை செயல் அதிகாரி லோகநாதம் மற்றும் அர்ச்சகர்கள் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

புராணச் சிறப்பு:
புராணங்களின்படி, சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கலியுகத்தின் தொடக்க காலத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணுவே வைகுண்டத்திலிருந்து பூமிக்கு (பூலோகத்திற்கு) ஸ்ரீ ஸ்ரீனிவாசனாக அவதரித்து எழுந்தருளினார். அக்காலத்தில், நாராயணவனத்தை ஆண்டு வந்த ஆகாசராஜ மன்னருக்கு ஏரியில் பூலோகத்தில் கிடைத்து மகளாக வளர்க்கப்பட்ட ( லட்சுமி தாயாரை ) பத்மாவதியை ஸ்ரீனிவாசனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். ஆகாசராஜ மன்னர், நாராயணவனத்தில் ஒரு வெள்ளிக்கிழமையன்று குறிப்பாக சித்திரை மாதம் சுத்த தசமி திதியில் பூரம் நட்சத்திரத்தில் பத்மாவதியை ஸ்ரீனிவாச பெருமாளுக்கு கன்னிகாதானம் செய்து கொடுத்ததாக ஸ்ரீ வேங்கடாசல மகாத்மியம் எனும் நூல் குறிப்பிடுகிறது.

பத்மாவதி மற்றும் ஸ்ரீனிவாசப் பெருமானின் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த அந்த மங்கலத் தருணத்தை நினைவுகூரும் வகையில், சித்திரை மாதம் சுத்த தசமிக்கு முந்தைய நாள், அந்நாள் மற்றும் அதற்குப் பிந்தைய நாள் என மொத்தம் மூன்று நாட்களுக்கு, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பத்மாவதி பரிணய உற்சவத்தை (திருமண உற்சவம்) நடத்துகிறது. இந்தத் உற்சவம் 1992-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. பத்மாவதி ஸ்ரீனிவாச திருமண வைபவங்கள் திருமலையில் அமைந்துள்ள நாராயணகிரி பூங்காவில் நடத்தப்படுகின்றன; இப்பூங்கா வரலாற்றுச் சிறப்புமிக்க நாராயணவனத்தை குறிக்கும் வகையில் திருமலையில் உள்ள நாரயணகிரி பூங்காவில் நடத்தப்படுகிறது.

Tags : Padmavati ,Tirupathi Elumalayan Temple ,Narayanagiri Park ,Padmavati Siniwasa Paranyam ,Malaiappa Swami Vehicle Hall ,
× RELATED நிச்சயிக்கப்பட்ட இன்ஜினியருக்கு 4...