கடப்பா: பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் திருமணத்தை நிறுத்த வற்புறுத்தியதால் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெய்ஹானா (26). இவர் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கும் கடப்பா மாவட்டம் பொத்துட்டூரைச் சேர்ந்தவரும் பெங்களூருவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருபவருமான ஷாஜகான் (30) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 15ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்த நிலையில், சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு ஷாஜகானின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து மனமுடைந்த நிலையில் இருந்த ரெய்ஹானா, கடந்த 23ம் தேதி கடப்பா படேல் வீதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறப்பதற்கு முன்னதாக 12 பக்க கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் ஷாஜகான் தன்னிடம், ‘எனக்கு உன் மீது துளிகூட ஈடுபாடு இல்லை. உன்னை எனக்கு பிடிக்கவில்லை’ என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு ஏற்கனவே நான்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், தனக்கு மதுப்பழக்கம் இருப்பதாகவும் கூறி ரெய்ஹானாவை திருமணத்தை நிறுத்துமாறு ஷாஜகான் வற்புறுத்தியதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரெய்ஹானாவின் பெற்றோர் கூறுகையில், ‘தனது தந்தை கட்டாயப்படுத்தியதால் தான் திருமணத்திற்கு சம்மதித்ததாக ஷாஜகான் கூறினார். திருமணத்தை நிறுத்துமாறு எங்கள் மகளுக்கு கடும் மன உளைச்சலை கொடுத்தார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான எங்கள் மகள் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். இதற்கு காரணமான ஷாஜகான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர். இதனையடுத்து ரெய்ஹானாவின் உடல் பிதேரத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சின்ன சவுக் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலைக்கு தூண்டியதாக சாப்ட்வேர் இன்ஜினியர் ஷாஜகான் மற்றும் அவரது பெற்றோர் வீரையா, வாஹிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
