×

பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லூர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையை தாம்பரம் ஆணையர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், எந்தவித அசம்பாவிதங்களுமின்றி மிக அமைதியாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் நடைபெற்று முடிந்தது. இத்தேர்தலுக்காக அண்டை மாநிலங்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படைகளில் இருந்து வரவழைக்கப்பட்ட காவலர்களை கொண்டு, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதன் விளைவாக, வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்றதுடன் சட்டம் – ஒழுங்கு மிகச்சிறப்பாக பராமரிக்கப்பட்டது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள் அனைத்தும் ஆயுதம் ஏந்திய காவலர்களின் பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள கீழ்க்கண்ட மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

சோழிங்கநல்லூர், பல்லாவரம் மற்றும் தாம்பரம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் குரோம்பேட்டை எம்ஐடியிலும், ஆலந்தூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியிலும், செங்கல்பட்டு மற்றும் திருப்போரூர் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஆத்தூர் ஒருங்கிணைந்த பயிற்சி மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட கீழ்க்கண்ட மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இயந்திரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. முதல் அடுக்கு: மத்திய பாதுகாப்புப் படை, இரண்டாம் அடுக்கு: தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாம் அடுக்கு: மாவட்ட ஆயுதப்படை மற்றும் உள்ளூர் காவல் துறையினர்.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார் குரோம்பேட்டையில் எம்ஐடி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களின் செயல்பாடுகள் மற்றும் கண்காணிப்பு கண்காணிப்பு அறைகளைச் சரிபார்த்தார். மேலும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மிக கவனமாக பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Tags : TAMBARAM COMMISSIONER ,BALLAWARAM ,THAMBARAM ,CHOSHINGANALLUR ,Tambaram ,Tambaram Municipal Police Commissionerate ,
× RELATED தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம்