×

பைக்குகளுக்கு தடை விதித்த விவகாரம்; தைரியம் இருந்தால் அவசர நிலை பிரகடனம் செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு கொல்கத்தா ஐகோர்ட் கண்டனம்

 

கொல்கத்தா: தேர்தல் காலத்தில் பைக்குகளுக்கு தடை விதித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மேற்கு வங்கத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதாக கூறி, கொல்கத்தா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் பகுதிகளில் பைக்குகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து தேர்தல் ஆணையம் கடந்த 21ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, வரும் 27ம் தேதி மாலை 6 மணி முதல் 29ம் தேதி தேர்தல் முடியும் வரை, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பைக்குகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், பைக் பேரணிகளுக்கும், பைக்கின் பின் இருக்கையில் மற்றொருவர் அமர்ந்து செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த தன்னிச்சையான முடிவால் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் டெலிவரி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நேற்று விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா ராவ், தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான போக்கை கடுமையாக சாடினார். அப்போது நீதிபதி, ‘தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்ய முடியாது. இது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். சாதாரண மக்களை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? போலீஸ் நிர்வாகம் மற்றும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும்போது இத்தகைய தடை எதற்கு? தைரியம் இருந்தால் அவசர நிலையை பிரகடனம் செய்துவிட்டு தேர்தலை நடத்துங்கள். பைக்குகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன், கார்களுக்கும் தடை விதிக்க வேண்டியதுதானே?’ என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். கடந்த 5 ஆண்டுகளில் பைக் ஓட்டுபவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற புள்ளி விபரத்தை சமர்ப்பிக்கவும், இத்தடை குறித்து நாளை (இன்று) விரிவான விளக்கம் அளிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags : Kolkata Aycourt ,Electoral Commission ,KOLKATA ,KOLKATA HIGH COURT ,ELECTION COMMISSION ,West Bengal ,South 24 areas ,Burkanas ,
× RELATED 152 தொகுதிகளில் 110 இடங்கள் கிடைக்கும்...