- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கரூர் மாவட்டம்
- கன்னியாகுமரி மாவட்டம்
- சென்னை
- தேர்தல் ஆணையம்
- கரூர்
- கன்னியாகுமரி
சென்னை: தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 85.14 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.62 சதவீதம் வாக்குகள் பதிவானது. கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த அளவாக 75.61 சதவீத வாக்குகளே பதிவானது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
234 தொகுதிகளில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 4,023 பேர் போட்டியிட்டனர். இதில் 3,579 ஆண்கள், 443 பெண்கள், ஒரு திருநங்கை வேட்பாளராக போட்டியிட்டனர். பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டது. அமைதியாக தேர்தல் நடைபெற வசதியாக 300 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் மற்றும் தமிழக போலீசார் 85 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.
இதுதவிர, வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே சுமார் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். முன்னதாக, தேர்தல் அலுவலக அதிகாரிகளே வாக்காளர்களுக்கு வீடு வீடாக சென்று பூத் சிலிப் வழங்கினர். வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்புகளில் கியூஆர் கோடு அச்சிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் வாக்காளர்கள் தங்களது பாகம் எண் மற்றும் வரிசை எண் குறிக்கப்பட்டு இருந்தது. இதை வைத்து, தாங்கள் எந்த இடத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை மிக எளிதாக கண்டறிய முடிந்தது.
தற்போது கோடைக்காலம் என்பதால், வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாமியானா பந்தல்கள், நிழற்குடைகள் மற்றும் தடையற்ற குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி செல்ல கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளங்கள் மற்றும் சக்கர நாற்காலி வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடி மையங்களில் செல்போன் பயன்படுத்தவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கவும் தடை செய்யப்பட்டது.
இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, பல வாக்குச்சாவடிகளில் காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வமாக வந்து வரிசையில் நின்றனர். தமிழகத்தில் மொத்தமுள்ள 75,064 வாக்குப்பதிவு மையங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமே வாக்குப்பதிவு நடைபெற்றது.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. குறிப்பாக தமிழக போலீசாரை விட துணை ராணுவப்படையினர் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 5,949 பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிகளவில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவேளை இல்லாமல் வாக்குப்பதிவு நடந்தது.
அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் முழுவதையும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. சில மையங்களில் வீடியோ கேமரா மூலமும் அனைத்து நடவடிக்கைகளும் பதிவு செய்யப்பட்டது. மேலும், வாக்குச்சாவடிகளில் பதிவாகும் காட்சிகளை சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் வாக்களித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் உள்ள சிலுவம்பாளையத்தில் உள்ள பள்ளியில் வாக்களித்தார். தவெக கட்சி தலைவர் விஜய் நீலாங்கரையில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார். பாஜ இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை அண்ணாநகரிலும், வைகோ கலிங்கப்பட்டியிலும் வாக்களித்தனர். தமிழகத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்ற வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்ததாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
சில இடங்களில் காலையில் வாக்குப்பதிவு தொடங்கியபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. பின்னர் புதிய இயந்திரம் மாற்றப்பட்டு காலதாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் காலையில் இருந்தே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. வெயில் காலம் என்றாலும் காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஓட்டு போட பொதுமக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். தமிழகத்தில் 18 வயது முதல் 19 வயதுடைய 14,59,039 பேர் முதல் முறையாக வாக்களிப்பதற்காக அடையாள அட்டை பெற்ற இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர்.
அவர்கள் வாக்களித்த பின்னர் வாக்குச்சாவடி மையங்களில் ஓட்டு போட்ட இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்ட அழியாத மை தெரியும் வகையில் தங்களது செல்போன்களில் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் அனுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோன்று, வாக்களித்துவிட்டு குடும்பத்தோடு செல்பி எடுத்து நண்பர்கள், உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்ப அதிகம் பேர் ஆர்வம் காட்டினர்.
தமிழகத்தில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் பேர் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. பின்னர் 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதமும், மதியம் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70 சதவீதம், 5 மணி நிலவரப்படி 82.24 சதவீதம் வாக்குகள், இறுதியாக மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 85 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். ஆனாலும், இறுதி வாக்குப்பதிவு நிலவரம் இன்றுதான் தெரியவரும். அப்போது சிறிதளவு மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 92.62 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.61 சதவீத வாக்குகளே பதிவானது. தமிழகத்தில் நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைந்தது. 6 மணிக்கு முன்னதாக வாக்குப்பதிவு மையத்திற்குள் வாக்களிக்க வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர். மேலும், தமிழகத்தில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவின் இறுதியில் 85.14 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு முன் இவ்வளவு சதவீதம் வாக்குகள் தமிழகத்தில் பதிவானது இல்லை. இது ஒரு வரலாற்று சாதனையாகும். நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு அரசியல் கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தயாராக உள்ள ஸ்ட்ராங் ரூமில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அந்த அறைக்கும் சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளது. அங்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை மற்றும் முன்னணி நிலவரம் 9 மணிக்கு தெரியவரும்.
* 90,00,000 பேர் வாக்களிக்கவில்லை
தமிழகத்தில் முதன் முறையாக அதிக சதவீத வாக்குகள் இந்த சட்டமன்ற தேர்தலில் பதிவாகியுள்ளது. ஆனாலும், சுமார் 1 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 6,28,69,955 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 4,58,86,784 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தனர். இது 72.81 சதவீதம் ஆகும்.
சுமார் 1.80 கோடி பேர் வாக்களிக்கவில்லை. அதேபோன்று, 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 6,23,33,925 வாக்காளர்கள் இருந்தனர். இதில் 4,34,58,875 பேர் மட்டுமே வாக்களித்தனர். இது 76.60 சதவீதம் ஆகும். அப்போது, 1,88,75,050 பேர் வாக்களிக்கவில்லை.
அதேபோன்று தற்போது நடந்த தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,83,89,578 பேர் வாக்களித்துள்ளனர். இது 85 சதவீதம் ஆகும். தற்போது 89,53,713 பேர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், எஸ்ஐஆர் நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் சுமார் 50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
