×

முன்னெச்சரிக்கையாக வாக்குச்சாவடி மையங்கள் அருகே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைப்பு அதிகாரிகள் தகவல் வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில்

வேலூர், ஏப்.23: முன்னெச்சரிக்கையாக வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அருகே 108 ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. வாக்குப்பதிவிற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது மாநிலம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று 100 டிகிரிக்கு மேல் பதிவானது.

கடும் வெயில் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் உட்பட பல்வேறு தரப்பினர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கிடையில், வாக்குச்சவாடிக்கு வருபவர்கள் எதிர்பாராத விதமாக மயக்கம் ஏற்பட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார துறையினர் தயார் நிலையில் உள்ளனர். மேல் சிகிச்சைக்காக வாக்குச்சாவடி மையங்கள் அருகே 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 118 ஆம்புலன்ஸ் உள்ளன. இன்று வாக்குப்பதிவையொட்டி, அதிக வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் கோடை காலம் என்பதால், ஓஆர்எஸ் கரைசல், குளுக்கோஸ் ஆகிய கலந்து தண்ணீர் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், முக்கிய சாலைகள், சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Vellore ,Tiruvannamalai ,Tirupattur ,Ranipet ,Tamil Nadu ,
× RELATED வேலூர் ஆப்காவில் கேரள சிறைத்துறை...