நெல்லை, ஏப். 23: நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (23ம்தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. இதை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. 90 வேட்பாளர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். 12.65 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(23ம்தேதி) நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, பாளை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 90 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவிற்காக பாளை. தொகுதியில் 296 வாக்குச்சாவடிகளும், நெல்லை தொகுதியில் 386 வாக்குச்சாவடிகளும், அம்பை. தொகுதியில் 321 வாக்குச்சாவடிகளும், நாங்குநேரி தொகுதியில் 349 வாக்குச்சாவடிகளும், ராதாபுரம் தொகுதியில் 326 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,678 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. மொத்தம் 12 லட்சத்து 65 ஆயிரத்து 302 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 16 ஆயிரத்து 911 பேர் ஆண்கள். 6 லட்சத்து 48 ஆயிரத்து 245 பேர் பெண்கள். 3ம் பாலினத்தினர் 146 பேர்.
இந்தத் தேர்தலில் 8 ஆயிரத்து 56 அரசு அலுவலர்கள், 356 நுண் பார்வையாளர்கள் தேர்தல் பணியாற்றுகின்றனர். சட்டமன்றத் தொகுதிகளில் அம்பாசமுத்திரம் தொகுதியில் 5 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுவதால் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடக்கிறது. நெல்லை, பாளை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவிற்காக 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
5 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 7 ஆயிரத்து 829 இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்படுகிறது. வாக்குச்சாவடிகளுக்கு உதவ 155 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இவர்கள் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை பெற்று வாக்கு எண்ணும் மையமான நெல்லை அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு சென்று ஒப்படைப்பர். வாக்குப்பதிவை முன்னிட்டு உள்ளூர் போலீசார், மத்திய போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 298 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் 298 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாடிகளில் ஒன்றிய அரசு அதிகாரிகள் மைக்ரோ அப்சர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மத்திய போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
