×

அழியாத மை உட்பட 140க்கும் மேற்பட்ட பொருட்கள் வாக்குப்பதிவிற்கு தயார்

நெல்லை, ஏப். 23: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில் அழியாத மை உட்பட 140க்கும் மேற்பட்ட பொருட்கள் வாக்குப்பதிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (ஏப்.23ம் தேதி) நடக்கிறது. இதை வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான கடைசி கட்ட பயிற்சி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. அப்போது அவர்களுக்கு எந்த வாக்குச்சாவடியில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஆணையை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வழங்கினர்.

அந்த ஆணையை பெற்றுக் கொண்டு வாக்குச்சாவடிகளின் தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் நிலை 1, 2, 3 என 4 பேர் வாக்குச்சாவடிகளை சென்றடைந்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஒன்றிய அரசின் ஊழியர் மைக்ரோ அப்சர்வராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை மண்டல அலுவலர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு வாக்குப்பதிவுக்கு தயார் படுத்தினர்.

வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்காக வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் டைரி, வாக்குச்சாவடிக்கு வெளியே ஒட்டப்படும் துண்டு நோட்டீஸ்கள், வாக்காளர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்படும் மறைவிடம், அதற்கான அட்டைகள், வாக்குப்பதிவு செய்த வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அழியாத மை, வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்த விவரத்தை குறிப்பதற்கான 17 ஏ படிவம், எத்தனை ஓட்டுக்கள் பதிவானது என்பதை குறிப்பதற்கான படிவம் 17 சி, பேனா, பென்சில் உள்ளிட்ட பொருட்களை வைப்பதற்கான சிறிய பாக்ஸ், வாக்குச்சாவடி அலுவலர்கள் அணிவதற்கான பேட்ஜ் உள்ளிட்ட 140க்கும் மேற்பட்ட பொருட்கள் மண்டல அலுவலர்களால் எடுத்துச் சென்று வழங்கப்பட்டது.

இதையடுத்து வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவிற்கு தயார் படுத்தப்பட்டன. இன்று மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தை மண்டல அலுவலர்களிடம் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் ஒப்படைப்பர். அப்போது வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் டைரி, எஞ்சியுள்ள அழியாத மை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் ஒப்படைக்கப்படும். திருவிழா கோலம் வாக்குப்பதிவை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவிற்காக ‘தேர்தல் திருவிழா, தமிழ்நாட்டின் பெருவிழா’ என நெல்லை மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதை முன்னிட்டு மாதிரி வாக்குச்சாவடிகள் வண்ண, வண்ண துணிகள், வாழைத் தோரணங்கள் கட்டி அழகுபடுத்தப்பட்டன. அம்பை. சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கேம்பிரிட்ஜ் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் பொது பார்வையாளர் அனுபா வஷ்தவா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனால் வாக்குச்சாவடிகள் வாக்காளர்களை வரவேற்க திருவிழாக் கோலம் பூண்டுள்ளன.

Tags : Nellai ,Tamil Nadu assembly elections ,
× RELATED கொலை மிரட்டல் விடுத்த விசிக நிர்வாகி கைது