×

சமூக நல்லிணக்கத்தை காக்க வாக்களியுங்கள்: இந்திய கம்யூ. வேண்டுகோள்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைமையில், கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக மக்கள் பேராதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒன்றிய அரசு, ஆளுநர் மாளிகை வழியாகவும், ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் மூலமாகவும் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் நிலையிலும், பின் தங்கி விடாமல், அரசியல் உறுதியுடன் முன்னேறி வருவதை அனைத்துப் பகுதி மக்களும் வாழ்க்கை அனுபவத்தில் உணர்ந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தர்கா அருகில் உள்ள சர்வே கல்லை, தீபத் தூண் என வரலாற்று உண்மைகளுக்கு மாறாக சித்தரித்து, தீபம் ஏற்ற முயலும் பிரச்சனை உட்பட பல பகுதிகளில் பாஜவும் சங் பரிவார் அமைப்புகளும் விதைத்து வரும் வெறுப்பு அரசியலை நிராகரித்து, மக்கள் ஒற்றுமையை பாதுகாத்து, சமூக நல்லிணக்கம் பேணி வரும் நல்லாட்சி தொடர்ந்திட, மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவு வழங்க தமிழக மக்கள் முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

தென் மாநிலங்களின் ஜனநாயகக் குரலை ஒடுக்கி, அழித்து விடும் அரசியல் சதியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உரிய காலத்தில் தலையிட்டு, கருப்புக் கொடி உயர்த்தி மசோதாவின் நகலை எரித்ததும், தமிழ்நாட்டு மக்கள் அவருடன் நின்றதும் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், ஜனநாயகப் படுகொலை நடக்காமல் தாற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக மக்கள் பேராதாரவு வழங்கி வெற்றி பெறச் செய்திட தமிழக மக்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Communist ,Chennai ,Communist Party of India ,State Secretary ,M. Veerapandian ,Tamil Nadu ,DMK ,BJP ,
× RELATED விபத்தில் அரசு ஊழியர், முதியவர் பலி;...