×

40 ரன் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான்

லக்னோ: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், 40 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 32வது போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. அதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ, பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். முகம்மது ஷமி வீசிய 3வது ஓவரில் ஜெய்ஸ்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த துருவ் ஜுரெல், அதே ஓவரின் அடுத்த பந்தில் ரன் எடுக்காமல் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து, மோஷின் கான் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்னுக்கு வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். 32வது ரன்னில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்ததால் ராஜஸ்தான் அணி செய்வதறியாது திணறியது. பின்னர், 4வது விக்கெட்டுக்கு கேப்டன் ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மயர் இணை சேர்ந்தனர்.

இந்த இணை 30 ரன்கள் சேர்த்த நிலையில் பிரின்ஸ் யாதவ் வீசிய 9வது ஓவரில் ரியான் பராக் (20 ரன்) அவுட்டானார். மோஷின் கான் வீசிய 11வது ஓவரில் ஹெட்மயர் (22 ரன்) 5வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.16வது ஓவரில், டொனோவன் பெரேராவை (20 ரன்), பிரின்ஸ் வீழ்த்தினார்.

20 ஓவர் முடிவில் ராஜஸ்தான், 6 விக்கெட் இழப்புக்கு, 159 ரன்கள் எடுத்தது. ரவீந்திர ஜடேஜா (43 ரன்), சுபம் தூபே (19 ரன்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. லக்னோ அணி 18 ஓவர்களில் 119 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து ராஜஸ்தான் அணி 40 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Tags : Rajasthan ,Lucknow ,Rajasthan Royals ,IPL ,Lucknow Super Giants ,Rajasthan Royals… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி..!