- தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையம்
- தூத்துக்குடி
- அண்ணா பல்கலைக்கழகம் வாக்ஸி அரசாங்க
- தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி, ஏப். 22: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளைத் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதற்காக வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் நடந்து வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான விஷூ மகாஜன் முன்னிலையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்களான எலுச்சூரி ரத்னாகர ராவ் (விளாத்திகுளம், தூத்துக்குடி), சோடிங்புயீ (திருச்செந்தூர், வைகுண்டம்), அரவிந்த் குமார் வர்மா (ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி) ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு அறைகள் மற்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு குறித்தும், வாக்கு எண்ணும் நாளன்று வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்குத் தேவையான தடுப்புகள், இருக்கை வசதிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்தும், மையத்தைச் சுற்றி அமைக்கப்பட உள்ள 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணி குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவது மற்றும் வாக்கு எண்ணிக்கையைத் தடையின்றி நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் துரிதப்படுத்தப் பார்வையாளர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
