புதுடெல்லி: சட்டவிரோதமாக 10,000 சிம் கார்டுகள் வாங்கிய முக்கிய நபரை மத்திய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். பொதுமக்களின் ஆதார் மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி, போலியான முகவரிகளில் சிம் கார்டுகளை பயன்படுத்தும் மோசடிகள் பற்றி மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் சைபர் க்ரைம் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், சர்வதேச மற்றும் உள்நாட்டு சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பு ஆபரேஷன் சக்ரா என்ற பெயரில் தேடுதல் மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, போலி டிஜிட்டல் கைதுகள், கடன் மற்றும் முதலீட்டு மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டும் வரும் சைபர் குற்றவாளிகளுக்கு சட்டவிரோதமாக சிம் கார்டுகளை கொடுக்கும் நபர்கள் குறித்தும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக 10,000 சிம் கார்டுகளை வாங்கிய முக்கிய குற்றவாளி நேற்று கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறுகையில், “சைபர் குற்றங்களுக்கு பயன்படுத்துவதற்காக சட்டவிரோதமாக 10,000 சிம் கார்டுகளை வாங்கிய உபைத் உல்லா கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தலைமறைவாக இருந்தார். அவரை மத்திய புலனாய்வு அதிகாரிகள் தேடி வந்த நிலையில் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் கைது செய்யப்பட்டார். இவர் சிம் கார்டுகளை வாங்குவதற்காக பிஓஎஸ் முகவர்களுக்கு பல வங்கி கணக்குகள் மூலம் ரூ.67 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இந்த சிம் கார்டுகளை பெற பயன்படுத்தப்பட்ட கூரியர் பரிவர்த்தனைகள் குறித்த ஆதாரங்களும் கிடைத்துள்ளன என்றனர்.
