×

மாட்ரிட் ஓபன் தகுதி சுற்று சில்லென்று ஒரு வெற்றி: சிமோனா அமர்க்களம்

 

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் தகுதிச் சுற்றுப் போட்டியில் நேற்று, சுவிட்சர்லாந்து நாட்டு வீராங்கனை சிமோனா வால்டெர்ட் அபார வெற்றி பெற்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்தன. மகளிர் ஒற்றையர் தகுதிச் சுற்றுப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீராங்கனை சிமோனா வால்டெர்ட், கிரேக்க வீராங்கனை டெஸ்பினா பாபாமிசெய்ல் மோதினர்.

முதல் செட்டில் இரு வீராங்கனைகளும் போட்டி போட்டு புள்ளிகளை எடுத்தனர். கடைசியில் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் சிமோனா வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் சிறப்பாக ஆடிய சிமோனா, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்றார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் அவர் வெற்றி பெற்றார். இன்று நடக்கும் முதல் சுற்று போட்டியில் ஜெர்மனி வீராங்கனை இவா லிஸ் – சீன வீராங்கனை ஜாங் சுவாய் மோதவுள்ளனர்.

மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை லாரா சாம்சன், ஜெர்மனி வீராங்கனை டாட்ஜனா மரியா மோதுகின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த தகுதிச் சுற்றுப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் மனஸ் தாம்னே (18), சீன வீரர் வு யிபிங் (26) உடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டில் அமர்க்கள ஆட்டத்தை வெளிப்படுத்திய யிபிங், 6-1 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் அந்த செட்டை கைப்பற்றினார். 2வது செட்டில் தாம்னே ஈடுகொடுத்து ஆடியபோதும், கடைசியில் அந்த செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் யிபிங் வசப்படுத்தினார். அதனால், 2-0 என்ற நேர் செட்களில் அவர் வெற்றி வாகை சூடினார்.

Tags : Madrid Open ,Simona Amarkalaam ,Madrid ,Simona Waltert ,Madrid Open Tennis Women's Singles Qualifying Round ,
× RELATED ஐபிஎல் 2026: குஜராத் அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி