×

தாய்க்கிழவியும் மனநலமும்…

நன்றி குங்குமம் டாக்டர்

செவ்விது செவ்விது பெண்மை!

ராதிகா சரத்குமார் ஹீரோயினாக நடித்துள்ள தாய்க்கிழவி திரைப்படம் சத்தம் போடாமல் சத்தம் போட்டுள்ளது. 55-60 வயது பெண்களின் மனநலனை குறித்து பேசப்போகும் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் தாய்க்கிழவியை கொஞ்சம் கடனாக வாங்கிக்கொள்கிறேன் உங்கள் அனுமதியுடன்.

இந்த வயதில் உள்ள பெண்களை நம்முடைய சமூகம் பல நேரங்களில் இரண்டு விதமாக மட்டுமே பார்க்கிறது:“இப்போ பிள்ளைகளோட அம்மா / மாமியார் / பாட்டி” “இப்போ சும்மா ஓய்வா இருக்கணும்” ஆனால் உண்மையில், இந்த வயதில் ஒரு பெண்ணின் மனதுக்குள் நடப்பது மிகவும் ஆழமானது.அவள் உடலில் மாற்றங்கள் நடக்கின்றன. அவள் உறவுகளில் மாற்றங்கள் நடக்கின்றன. அவள் வீட்டில் அவள் இடம் மாறுகிறது. அவள் உள்ளுக்குள் கேட்க ஆரம்பிக்கிறாள்:

“என் வாழ்க்கை முழுக்க எல்லோருக்காக வாழ்ந்தேன்… இப்போ நான் யார்?”

இந்த மனநிலையை மிகவும் சக்திவாய்ந்த முறையில் சித்தரிக்க உதவும் ஒரு பாத்திரம் தான் ‘தாய்க்கிழவி’ திரைப்படத்தின் மையக் கதாபாத்திரம். அந்த பெண் மென்மையானவளாக, எல்லோருக்கும் தியாகம் செய்பவளாக, அமைதியாக ஒதுங்கிக் கொண்டிருப்பவளாக வருவதில்லை.அவள் கூர்மையானவள், கட்டுப்பாட்டில் வாழ்பவள், பணத்தைப் பற்றிக் கணக்குள்ளவள், அதிகாரம் உடையவள், உள்ளுக்குள் பல காயங்களை சுமந்தவள். அதனால்தான் அவள் ஒரு சினிமா பாத்திரம் மட்டுமல்ல – நம் ஊர்களில், தெருக்களில், குடும்பங்களில் இருக்கும் பல 50-60 வயது பெண்களின் மனதின் பிரதிபலிப்பு.

“நான் யார்?” – அடையாளத்தை மீட்டெடுப்பது…
ஒரு பெண் 20-40 வயதுகளில் பொதுவாக ஓடிக்கொண்டே இருப்பாள்:
திருமணம், கர்ப்பம், குழந்தை வளர்ப்பு, வீட்டுப்பணி, வேலை, குடும்ப சுமைகள்,
உறவினரின் எதிர்பார்ப்புகள், அவளுக்கு தன்னையே பற்றி யோசிக்க நேரமில்லை.

ஆனால் 50-60 வயதிற்கு வரும்போது: பிள்ளைகள் பெரியவர்களாகிவிடுகிறார்கள், சிலர் திருமணம் செய்து தனியாகி விடுகிறார்கள், வீட்டில் அவளை நாடும் விதம் மாறிவிடுகிறது, அவள் “தேவை” குறைவதாக உணரலாம்,  அப்போதுதான் அவள் உள்ளுக்குள் கேட்கத் தொடங்குகிறாள்:

“நான் அம்மா என்ற பாத்திரத்தைத் தாண்டி யார்?”, “என் ஆசைகள் எங்கே போனது?”, “என்னை யாராவது உண்மையிலேயே புரிந்துகொண்டார்களா?” இந்த வயதில் பல பெண்களுக்கு வரும் மிகப் பெரிய உளவியல் சிக்கல் இதுதான்:

Identity Vacuum

வாழ்க்கை முழுக்க மற்றவர்களுக்காக வாழ்ந்த ஒருவர், ஒருநாள் தன்னைப்பற்றித் தானே கேட்க ஆரம்பித்தால் – அது அமைதியான புரட்சி. ‘தாய்க்கிழவி’ கதாபாத்திரம் இந்த அர்த்தத்தில் மிகவும் சுவாரஸ்யமானது. அவள் தன்னை முழுவதும் கரைத்துவிட்ட பெண் அல்ல. அவளுக்கு தனி சுயம் இருக்கிறது. அது மென்மையாக இல்லாமலும் இருக்கலாம்; ஆனால் அது வலிமையானது கடினமாகிப் போன மனம் – “மென்மையாக இருந்தால் மிதிக்கப்படுவோம்” என்ற வாழ்க்கைப் பாடம்.

நம் சமூகத்தில் பல பெண்கள் வயதாகும்போது “கடுப்பானவர்கள்” போலத் தோன்றுவார்கள். சின்ன விஷயத்திற்கே கோபம் யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள்.எதிலும் குறை சொல்லுவார்கள். கட்டுப்படுத்த முயல்வார்கள். வார்த்தையில் கூர்மை இருக்கும். இதைக் குடும்பம் பொதுவாக இப்படி சொல்லும்:
“வயசானதால இப்படித்தான் ஆயிட்டாங்க…” ஆனால் உளவியல் என்ன சொல்கிறது? பல பெண்களின் “கடினம்” என்பது அவர்களின் உண்மையான குணம் அல்ல. அது வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாதுகாப்பு கவசம்.

ஏன் இந்த கவசம் உருவாகிறது? பல ஆண்டுகள் மதிப்பில்லாமல் உழைத்ததால் கணவன் / குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டதால் உணர்ச்சிவசப்படும்போது பயன்படுத்திக் கொண்டதால் நிதி பாதுகாப்பில்லாமல் வாழ்ந்ததால் பல துரோகம், ஏமாற்றங்கள் சந்தித்ததால் அதன் பின் மனம் சொல்லும்:

“இனி நான் மென்மையாக இருக்கக் கூடாது.” அப்போதுதான் உருவாகிறது:

கடினமான பேச்சு, சுய பாதுகாப்பு, உணர்ச்சி விலகல், அதிக கணக்கு, அதிக எச்சரிக்கை. ‘தாய்க்கிழவி’ நாயகி இந்த உளவியலை பிரதிபலிக்கிறார். அவள் “கொடுமையானவள்” என்று மட்டும் பார்க்கப்பட வேண்டியவர் அல்ல. அவள் வாழ்க்கை காயங்களால் கவசம் அணிந்த பெண். கட்டுப்பாட்டின் தேவை – உதவியற்ற நிலைக்கு எதிரான மன பாதுகாப்பு 50-60 வயதிலுள்ள பெண்களிடம் பொதுவாக காணப்படும் ஒரு உளவியல் அம்சம்:

“எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருக்கணும்” என்ற உணர்வு அவர்கள்: வீட்டுப் பணிகள் எப்படி நடக்க வேண்டும், பணம் எப்படி செலவாக வேண்டும், யார் எப்போது வர வேண்டும், யார் எப்படி பேச வேண்டும், பேரன்கள் / பேத்திகள் எப்படி வளர வேண்டும், என்பதில் அதிக ஈடுபாட்டைக் காட்டலாம்.

வெளியில் இருந்து பார்க்கும்போது இது: “அதிக அதிகாரம்”, “மாமியார் தனம்”, “அளவுக்கு மீறிய தலையீடு”, “கட்டுப்பாடு” போலத் தோன்றலாம்.
ஆனால் உள்ளுக்குள் இது பல நேரங்களில்:

“என் வாழ்க்கையில் நான் இன்னும் முக்கியமானவளா?”, “என் கையில் என்ன இருக்கிறது?” என்ற அச்சத்தின் வெளிப்பாடு.
இந்த வயதில் பெண்கள் இழப்பது:

உடல் வலிமை, இளமை, குடும்பத்தின் மைய இடம், குழந்தைகள் மீது முழு செல்வாக்கு, சில சமயம் கணவன் ஆதரவு சில சமயம் சமூக கவனம் இவ்வளவு மாற்றங்கள் நடக்கும்போது, மனம்
எதையாவது பிடித்துக் கொள்ளும்.

அதனால்தான்: பணம், வீட்டு ஒழுங்கு, சொத்து, உறவுகள், பேரன் / பேத்தி வளர்ப்பு இவை அவர்களுக்கு மன ரீதியாக மிகப் பெரிய கட்டுப்பாட்டு தளங்கள் ஆகின்றன.
‘தாய்க்கிழவி’ கதாபாத்திரம் இதை மிகத் தெளிவாக நினைவூட்டுகிறது:

சில பெண்களுக்கு “அதிகாரம்” என்பது குணம் அல்ல; அது அவர்களின் பாதுகாப்பு.
பணம் = மரியாதை = மன நிம்மதி.

இந்த வயதில் உள்ள பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பணத்தைப் பற்றிய அவர்களின் மன உளவியலை புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு பணம் என்பது வெறும் காசு அல்ல. அது:

பாதுகாப்பு, சுயமரியாதை, யாரிடமும் கையேந்த வேண்டாம் என்ற நிம்மதி, முடிவெடுக்கும் உரிமை, வீட்டில் அதிகாரம், அவமானத்திலிருந்து விடுபாடு.
தமிழ் குடும்ப அமைப்புகளில் பல பெண்கள் இளம் வயதில்:

தங்கள் சம்பளம் கொடுத்திருக்கலாம், நகைகள் விட்டிருக்கலாம், சேமிப்பு இல்லாமல் குடும்பத்திற்காக செலவழித்திருக்கலாம், “பெண்களுக்கு என்ன பணம்?” என்ற மனப்பான்மையில் வளர்ந்திருக்கலாம், ஆனால் 50-60 வயதில் அவர்கள் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்கள்:
“என்னிடம் என்ன இருக்கிறதோ, அதற்குத்தான் உலகம் மதிப்பு தருகிறது.”

அதனால் தான் சில பெண்கள்:
சேமிப்பில் தீவிரம் காட்டுவார்கள், சொத்து விஷயத்தில் கவனமாக இருப்பார்கள், குழந்தைகளிடம் முழு நம்பிக்கை வைக்க மாட்டார்கள், “என் கையில் இருக்கணும்” என்று நினைப்பார்கள். இது பேராசை அல்ல. பல நேரங்களில் இது உயிர் காப்பு உளவியல்.

‘தாய்க்கிழவி’ நாயகியின் பண ஆளுமை நமக்கு சொல்லும் பெரிய உண்மை:
ஒரு பெண் பணத்தைப் பிடித்துக் கொள்வது, அவள் வாழ்க்கையைப் பிடித்துக் கொள்வதற்குச் சமம். “அவர்கள் என்னை நேசிக்கிறார்களா? இல்லை என்னைப் பயன்படுத்துகிறார்களா?”
50-60 வயது பெண்களின் உள்ளுக்குள் மிக ஆழமாக எரியும் ஒரு கேள்வி இதுதான்:

“என்னை உண்மையிலேயே யாராவது நேசிக்கிறார்களா?”
வாழ்க்கை முழுக்க அவர்கள் இருந்தது:

சமையலுக்கு, குழந்தை வளர்ப்புக்கு, நோய்வாய்ப்பட்டவர்களை கவனிக்க, வீட்டு பிரச்னைகளை சமாளிக்க, பண உதவி செய்ய, உணர்ச்சி ஆதரவாக இருக்க.
ஒருநாள் அவர்கள் நின்று பார்த்தால் தெரியவரும்:

“என்னை மனிதராக யாராவது பார்த்தார்களா?, அல்லது நான் ஒரு ‘பணி’ மாத்திரமா இருந்தேனா?”, இந்த உணர்வு மிகவும் வேதனையானது.
குழந்தைகள் பெரியவர்கள் ஆன பின் சிலருக்கு தோன்றும்:

“அம்மா என்று அழைக்கிறார்கள்… ஆனால் என்னைப் புரிந்துகொள்கிறார்களா?”, “என்னிடம் அன்பா? இல்லை என் பணத்திற்கா?”, “நான் பலவீனமானவளானால் என்னை கவனிப்பார்களா?”
‘தாய்க்கிழவி’ கதாபாத்திரத்தைச் சுற்றி உருவாகும் குடும்ப உறவுகள் இதையே சுட்டிக்காட்டுகின்றன. இது பல தமிழ் குடும்பங்களில் உண்மையாக நடக்கும் மனவியல். அம்மாவை / மாமியாரை / பாட்டியை சிலர் நேசிப்பார்கள். சிலர் பயன்படுத்துவார்கள்.

அதை அந்த பெண் மிகவும் நுணுக்கமாக உணரத் தொடங்கும் வயதே இது. மாதவிடாய் நிறைவு (Menopause) – உடலின் மாற்றம், மனதின் அதிர்வு 50-60 வயது பெண்களின் உளவியல் பற்றி பேசும்போது மெனோபாஸ் / மாதவிடாய் நிறைவு பற்றி பேசாமல் இருக்க முடியாது. இது உடல் மாற்றம் மட்டும் அல்ல; இது ஒரு அடையாள மாற்றம் கூட. இதன் போது பெண்களுக்கு வரக்கூடியவை:

தூக்கக் கோளாறு, உடல் சூடு / hot flashes, எரிச்சல், திடீர் கோபம், மனம் சோர்வு, பதட்டம், உடல் சோர்வு, பாலுணர்வு மாற்றங்கள், நினைவாற்றல் மங்குவது போல உணர்வு, “நான் மாறிப் போயிட்டேனா?” என்ற உணர்வு. ஆனால் நம் சமூகம் இதை எவ்வளவு பேசுகிறது? மிகக் குறைவு. பல பெண்கள் இந்த மாற்றங்களை அனுபவிக்கும்போது, அவர்களுக்கு சொல்லப்படுவது:

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோ”, “இது சாதாரணம்”, “வயசு ஆகுதுல”, “இவ்வளவு சின்ன விஷயத்துக்கு எதுக்கு கோபம்?”, இதனால் அவர்கள் அனுபவிக்கும் உண்மையான மன அழுத்தம், குணக்கேடு என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அதனால் இந்த வயதில் வரும்:

எரிச்சல், திடீர் மனமாற்றம், அழுகை, வெறுப்பு, உடல் பற்றிய அசௌகரியம். இவை எல்லாம் சில நேரங்களில் ஹார்மோன் + வாழ்க்கை அனுபவம் சேர்ந்த விளைவுகள்.
50-60 வயதில் இருக்கும் பல பெண்களின் மிகப் பெரிய மன வேதனை:

தனிமை, அது “ஒற்றை வாழ்க்கை” என்ற அர்த்தத்தில் மட்டும் இல்லை. ஒரு பெண் வீட்டில்:

கணவர், பிள்ளைகள், மருமகள் / மருமகன், பேரன் / பேத்தி, உறவினர்கள் எல்லாரும் இருந்தாலும்… அவள் உள்ளுக்குள் தனியாக இருக்கலாம். ஏன்? ஏனெனில்: “என்னைத் தேவைப்
படுவது” மற்றும்“என்னை உண்மையிலேயே புரிந்து கொள்வது” – இரண்டு வேறு விஷயங்கள்.
பல பெண்கள் இந்த வயதில் அனுபவிப்பது: யாரிடமும் மனம் திறந்து பேச முடியாத நிலை.

மனநல மருத்துவர் மா . உஷா நந்தினி

Tags : Kungumam ,Radhika Sarathkumar ,
× RELATED நரம்பு மண்டலம் எனும் அற்புதமான அமைப்பு!