×

3 மசோதாக்கள் தோல்வி பற்றி டிவியில் பேச்சு தேர்தல் நடத்தை விதிகளை மோடி மீறி விட்டார்: மம்தா குற்றச்சாட்டு

தாரகேஸ்வர்: “பிரதமர் மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறி விட்டார்” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார். ஒன்றிய அரசின் 3 மசோதாக்கள் தோல்வி பற்றி பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு டிவியில் உரையாற்றினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் தாரகேஸ்வரில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசுகையில், ‘‘அரசியல் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் மூலம் மோடி பாஜவுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளை மீறி, சட்டவிரோதமாக அரசியல் பிரசாரத்துக்காக அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். இதை கண்டித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். சட்டவிரோத பிரசாரம் செய்தது ஏன் என்று மோடி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்” என தெரிவித்தார்.

* மோடி மீது நடவடிக்கை இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தல்
மார்க்சிஸ்ட் பொதுசெயலாளர் எம்.ஏ.பேபி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி சந்தோஷ் குமார் ஆகியோர், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு தனித்தனியே எழுதி உள்ள கடிதங்களில், “ தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், பிரதமர் மோடி தூர்தர்ஷன் மற்றும் சன்சாத் டிவி போன்ற பொதுதளங்களில் உரையாற்றி உள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சு அப்பட்டமான அரசியல். எதிர்க்கட்சிகளை குறி வைத்து , அவர்களின்(எதிர்க்கட்சி தலைவர்கள்) பலரது பெயர்களை சொல்லி, ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துள்ளார். இந்த விதிமீறல்கள் பற்றி, பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Modi ,Mamata ,Tarakeswar ,West Bengal ,Chief Minister ,Mamata Banerjee ,Union government ,
× RELATED பொம்மை கார்களில் வெடிகுண்டு 4 தீவிரவாதிகள் டெல்லியில் கைது