×

தோற்கடிக்கப்பட்டது தொகுதி வரையறை மசோதா, மகளிர் மசோதா அல்ல தற்போதைய மக்களவை பலத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த காங்கிரஸ் கோரிக்கை

புதுடெல்லி: மக்களவையில் தொகுதி வரையறை மசோதா தோற்கடிக்கப்பட்டது, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா அல்ல என்றும் மக்களவை பலத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கோரியுள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேத்தே நேற்று கூறுகையில்,‘‘ மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்படவில்லை; நீங்கள் (அரசாங்கம்) நாட்டின் மீது திணிக்க விரும்பிய தொகுதி மறுவரையறைதான் தோற்கடிக்கப்பட்டது.

பிரதமர் மோடி முதலைக் கண்ணீர் வடித்து, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்’’ என்றார். பிரதமர் மோடி 543 மாம்பழங்கள் கொண்ட ஒரு கூடையை வைத்திருந்தும், பெண்களுக்கு உரிய 33 % பங்கைக் கொடுக்க மறுத்து, அந்த எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தினால் மட்டுமே அவர்களுடைய பங்கைக் கொடுக்க முடியும் என்றும், ஆனால் எதிர்க்கட்சிகள் அவரை அவ்வாறு செய்ய அனுமதிக்கவில்லை என்றும் கூறுவது போன்ற ஒரு கார்ட்டூனை ஸ்ரீநேத்தே நிருபர்களிடம் காண்பித்தார்.

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மக்களவையில் ஏற்பட்ட அவமானகரமான தோல்விக்குப் பிறகு, மோடி அரசு சேத கட்டுப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு அல்ல, மாறாக அது மக்களவையில் நிறைவேறத் தவறிய பின்னரே, கேள்வி-பதில்கள் அடங்கிய தொகுப்பை அரசு வெளியிட்டுள்ளது.

அந்தக் கேள்விகள் ‘உண்மைகளைத் திரித்துக் கூறும் போலி மருத்துவம்’ போலவும்,சேதத்தைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இருக்கிறது. இந்தக் கேள்வி-பதில் பகுதியில் உள்ள மிகவும் ‘தவறான’ ஒரே வாக்கியம், இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்த தொகுதி மறுவரையறை அவசியம் என்ற மோசடியான கூற்றுதான் என்று அவர் கூறினார்.

Tags : Congress ,Lok Sabha ,New Delhi ,Supriya Sreenethe ,
× RELATED பொம்மை கார்களில் வெடிகுண்டு 4 தீவிரவாதிகள் டெல்லியில் கைது