×

பஞ்சாப் அபார வெற்றி

நியூ சண்டிகார்: லக்னோ அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 29வது போட்டி நியூ சண்டிகாரில் நேற்று நடந்தது. அதில் பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ பந்து வீசியது. அதையடுத்து, பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். முகம்மது ஷமி வீசிய முதல் ஓவரில் பிரப்சிம்ரன் சிங் ரன் எடுக்காமல் வீழ்ந்தார்.

அடுத்து வந்த கூப்பர் கனோலி, பிரியன்ஸ் ஆர்யா இணை சேர்ந்து, லக்னோ அணி வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்து இமாலய ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அவர்களின் விஸ்வரூப ஆட்டத்தால் சிக்சர்களும் பவுண்டரிகளுமாக பறந்தன. இந்த இணை, வெறும் 80 பந்துகளில் 182 ரன்கள் குவித்த நிலையில், பிரின்ஸ் யாதவ் வீசிய 14வது ஓவரில் கனோலி (46 பந்து, 7 சிக்சர், 8 பவுண்டரி, 87 ரன்) ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து மணிமாறன் சித்தார்த் வீசிய 15வது ஓவரில் பிரியன்ஸ் ஆர்யா (37 பந்து, 9 சிக்சர், 4 பவுண்டரி, 93 ரன்) அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5, நேஹல் வதேரா 13, சஷாங்க் சிங் 17 ரன்னில் அவுட்டாகினர். கடைசி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடி 16 பந்துகளில் 29 ரன் விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார்.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் கிங்ஸ், 7 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் குவித்திருந்தது. இது, நடப்பு ஐபிஎல் தொடரில் உச்சபட்ச ரன்னாக அமைந்தது. லக்னோ தரப்பில், மணிமாறன் சித்தார்த், பிரின்ஸ் யாதவ்தலா 2, முகம்மது ஷமி, மோஷின் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Tags : Punjab ,New Chandigarh ,IPL ,Lucknow ,Punjab Kings ,Lucknow Super Giants ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி..!