நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, புள்ளிப் பட்டியலில் தனது கணக்கைத் தொடங்கியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி, ஒரு கட்டத்தில் 85 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் நின்றது.
இருப்பினும், இக்கட்டான சூழலில் ஜோடி சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் அனுகுல் ராய் நிதானமாகவும் அதிரடியாகவும் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். குறிப்பாக, ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் ரிங்கு சிங் 8 ரன்களில் இருந்தபோது கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை பர்கர் நழுவவிட்டது ஆட்டத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த ஒரு தவறு ராஜஸ்தான் அணியின் வெற்றியை தட்டிப்பறித்தது.
இந்த சீசனில் கேகேஆர் அணியின் துணை கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ள ரிங்கு சிங், கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மிகுந்த அழுத்தத்தில் இருந்தார். இந்நிலையில் இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் மீண்டும் ஒருமுறை ‘பினிஷராக’ ஜொலித்த ரிங்கு, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார். இதன் மூலம் இந்த சீசனில் கொல்கத்தா அணி தனது முதல் 2 புள்ளிகளைப் பெற்று உற்சாகத்துடன் பயணத்தைத் தொடர்கிறது.
