அம்பை ஏப்.19: அம்பாசமுத்திரம் வட்டம், டாணா பகுதியை சேர்ந்த இசக்கி மகன் ஹரிஹரன் (25), இவர் மீது போக்சோ வழக்கு உள்ள நிலையில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அம்பை அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா மாவட்ட எஸ்பி பிரசண்ண குமாரிடம் வேண்டுகோள் வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்பி பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில், நேற்று ஹரிஹரன் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொண்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் நெல்லை மாவட்டத்தில் மக்களின் பாதுகாப்பை கருதி, சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 45 நபர்கள் தமிழ்நாடு தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
