சென்னை: தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை VIT இணைந்து, ஏப்ரல் 18 மற்றும் 19, 2026 ஆகிய 2 தேதிகளில் சென்னையில் நடத்தும் பிரம்மாண்டமான மாபெரும் கல்வி கண்காட்சி (Education Expo) தொடங்கி உள்ளது. இந்த கல்வி கண்காட்சியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்கேற்று அரங்கம் அமைத்து உள்ளன.
பிளஸ் 2 மாணவர்களுக்காக நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் துவங்கி நடைபெற்று வரும் இந்த மாபெரும் கல்வி கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று உயர்கல்வி வாய்ப்புகள், பொறியியல், மற்றும் தொழில்நுட்பக் கல்வி குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம். இன்றும், நாளையும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் இந்த மாபெரும் கல்வி கண்காட்சியின் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் (ஹால் 1பி) நடைபெற்றது.
பிளஸ் 2 முடித்த பிறகு என்ன படிக்கலாம்! எங்கு படிக்கலாம்! கல்விக்கடன் கிடைக்குமா! என்ன படித்தால் எதிர்காலம் சிறப்பாக அமையும்! இப்படி உயர்கல்வி தொடர்பான மாணவர்களின் அனைத்து முக்கிய சந்த்கேங்களுக்கும் தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி 2026 தீர்வாக இருக்கும். உயர் கல்வி தொடர்பாக மாணவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை தீர்க்க கல்வியாளர்கள் இந்த கண்காட்சியில் பங்கு பெறுகிறர்கள். பிளஸ் 2 படித்து முடித்து விட்டு தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய படிப்பை தேர்வு செய்வது என்பது மாணவர்களிடையே மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோருக்கும் சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. பிளஸ் 2 முடித்து, அடுத்து என்ன படிக்கலாம்; எந்த கல்லூரியில் சேரலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்க ஒவ்வொரு ஆண்டும் தினகரன் நாளிதழ் சார்பில் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பிரமாண்ட கல்வி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டும் தினகரன் நாளிதழ் மற்றும் சென்னை விஐடி கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கண்காட்சி இன்றும், நாளையும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் (ஹால் 1பி) நடைபெற்றது. விழாவை தினகரன் நாளிதழ் நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ் முன்னிலையில், சென்னை விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் டாக்டர் ஆர்.ரகு, பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை தலைவர் டாக்டர் ஆர்.எம்.சுரேஷ், சென்னை அமிர்தா குரூப் தலைவர் டாக்டர் பூமிநாதன், பி.எஸ்.அப்தூர் ரகுமான் கிரெசென்ட் இன்ஸ்டிடியூட் பதிவாளர் டாக்டர் ராஜா உசேன், தனலட்சுமி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் சேர்மன் வி.பி.ராமமூர்த்தி, ரெமோ குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ் டைரக்டர் ரித்திக் பாலாஜி ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறும் கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடக்கிறது. இந்த கல்வி கண்காட்சியில் உள்நாட்டு படிப்புகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. கல்வி கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கல்லூரிகளின் அரங்குகளை மாணவர்கள், பெற்றோருடன் பார்வையிட்டு விளக்கம் கேட்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரங்குகளில் பேராசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.
அவர்களிடம் கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், விமான தொழில்நுட்பம், அனிமேஷன், அயல்நாட்டு கல்வி, கலை அறிவியல், நர்சிங், ஊடகம், ஓட்டல் மேலாண்மை, கட்டிட கலை, புகைப்பட கல்வி, வர்த்தக கல்வி, கடல்சார் கல்வி, அழகு கலை, தீ மற்றும் பாதுகாப்பு, காலணி வடிவமைப்பு, பிளாஸ்டிக், பெட்ரோலியம், ஆடை வடிவமைப்பு, விமான பணி, ட்ரோன் தொடர்பான படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த படிப்புகள் குறித்து மாணவ, மாணவிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம்.
வெளிநாட்டில் கல்வி பயில விரும்பும் மாணவ மாணவிகளுக்கான வழிகாட்டுதல்கள், அவர்களுக்கான ஊக்கத்தொகைகள் குறித்த வழிமுறைகளும் வழங்கப்பட உள்ளது. உள்நாட்டு படிப்புகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. இதுதவிர கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கை வழிமுறைகள், கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், ஊக்கத் தொகை பெறுவது எப்படி, கட்டண சலுகைகள் பெறுவது எப்படி உள்ளிட்ட சந்தேகங்களுக்கு விளக்கங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், பெற்றோர்களுக்கும் முறையான விளக்கங்கள் கொடுக்கப்பட உள்ளது. கண்காட்சிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. எனவே பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இந்த மாபெரும் கல்வி கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
