×

சில்லிபாயிண்ட்…

* 4வது தொடர் தோல்வி விரக்தியில் ஹர்திக்
மும்பை: ஐபிஎல் போட்டிகளில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. 4வது முறையாக தொடர் தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறுகையில், ‘கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. இந்த தோல்விகளுக்கு தனிப்பட்ட வீரர்கள் காரணமா? அல்லது, ஒட்டு மொத்த அணியா? இல்லையெனில், திட்டமிடுதலில் பிழையா? என கண்டறிந்து தக்க தீர்வு காண வேண்டும்’ என்றார்.

* தில்பிரீத் பஜ்வா மீது ஊழல் புகார்
சென்னை: கடந்த பிப்ரவரி 17ம் தேதி சென்னையில் நியூசிலாந்து – கனடா அணிகள் இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டி நடந்தது. கனடா அணிக்கு புதிய கேப்டனாக 3 வாரங்களுக்கு முன் நியமிக்கப்பட்டிருந்த தில்பிரீத் பஜ்வா, அணியின் 5வது ஓவரை வீசுகையில், நோ பால், வைட் பால் போட்டதாகவும், எளிதில் அடிக்கும் வகையில் பந்துகளை வீசியதாகவும் ஊழல் புகார் எழுந்தது. கனடாவை சேர்ந்த புலனாய்வு அமைப்பு, இது தொடர்பாக 43 நிமிட ஆவணப்படம் தயாரித்து, அது, சிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி விசாரணை நடத்தி வருகிறது.

* பார்சிலோனா டென்னிஸ் அல்காரஸ் காயம்
பார்சிலோனா: பார்சிலோனா ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டி, ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ரவுண்ட் ஆப் 16 போட்டி ஒன்றில் ஸ்பெயினை சேர்ந்த உலகின் முதல் நிலை வீரர் கார்லோஸ் அல்காரஸ் – செக் வீரர் தோமஸ் மகாக் மோதவிருந்தனர். ஆனால், அல்காரஸின் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருந்ததால் அவரால் ஆட முடியவில்லை. எனவே, போட்டியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். அதையடுத்து, தோமஸ் மகாக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அவர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

Tags : Chillipoint… ,Hardik ,Mumbai ,Mumbai Indians ,IPL ,Punjab Kings ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...