×

குஜராத் அணி வெற்றி

அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 19வது தொடரின் 25வது போட்டி அகமதாபாத் நகரில் நேற்று நடந்தது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதையடுத்து கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக டிம் செபெர்ட், கேப்டன் அஜிங்கிய ரஹானே களமிறங்கினர்.

முகம்மது சிராஜ் வீசிய முதல் ஓவரில், ரஹானே ரன் எடுக்காமல் விக்கெட் இழந்து அதிர்ச்சி தந்தார். காகிஸோ ரபாடா வீசிய 2வது ஓவரின் கடைசி பந்தில் டிம் செபெர்ட் (19 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். 4வது ஓவரில் மீண்டும் சிறப்பாக பந்து வீசி கைவரிசை காட்டிய ரபாடா, அங்கிரீஷ் ரகுவன்ஷியை (8 ரன்) வீழ்த்தினார். 32 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அடுத்து இணை சேர்ந்த கேமரூன் கிரீன், ரோமேன் பாவெல் சிறப்பாக ஆடி 55 ரன்கள் சேர்த்த நிலையில், பாவல் (27 ரன்) ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கேமரூன் கிரீன் 34 பந்துகளில் அரை சதம் வெளுத்தார். அடுத்து வந்த அனுகுல் ராய் (9 ரன்), பிரசித் கிருஷ்ணா வீசிய துல்லிய பந்தில் அவுட்டாகி நடையை கட்டினார். பின்னர், ரிங்கு சிங்கை (1 ரன்), ரபாடா அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து, 17வது ஓவரில் ரமண்தீப் சிங் (17 ரன்), 18வது ஓவரில் சுனில் நரைன் (0 ரன்), 19வது ஓவரில் கார்த்திக் தியாகி (6 ரன்) வீழ்ந்தனர். கடைசி ஓவரின் கடைசி பந்தில் கேமரூன் கிரீன் (55 பந்து, 4 சிக்சர், 7 பவுண்டரி, 79 ரன்) அவுட்டானார்.

20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 180 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் தரப்பில் ரபாடா 3, அசோக் சர்மா, சிராஜ் தலா 2, பிரசித், ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 181 ரன் இலக்கை துரத்தும் நோக்கில் குஜராத் அணி 2வது இன்னிங்சை துவங்கியது. அந்த அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

இதனால் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 86 ரன், பட்லர் 25 ரன், சாய் சுதர்சன் 22 ரன் எடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட், வைபவ் அரோரா, சுனில் நரைன், ரமன்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Tags : Gujarat ,Ahmedabad ,Kolkata ,IPL ,Kolkata Knight Riders ,Gujarat Titans ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு...