×

எல்பிஜி விநியோகம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.! பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் விளக்கம்

டெல்லி: நாட்டில் எல்பிஜி விநியோகம் குறித்து வெளிவரும் எதிர்மறை தகவல்கள் தவறானவை என்றும் இது எல்பிஜி விநியோகத்தின் நிலைமை குறித்து ஒரு தவறான எண்ணத்தை உருவாக்குவதாகவும் ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.

எல்பிஜி விநியோகத்தில் நீண்டகால இடையூறு இருப்பதாகக் கூறும் சில அறிக்கைகளை சாடியுள்ள அமைச்சகம், பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதன் மூலம் விநியோகத்தைப் சீராக வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு தேவையான சரக்குகள் தற்போது வந்து கொண்டிருக்கின்றன என்றும் அமைச்சகம் கூறி இருக்கிறது.

அதே நேரம் எல்பிஜி உற்பத்தியை அதிகபட்சமாக்குமாறு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது; இது தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையிலான இடைவெளியை ஈடுகட்ட உதவுகிறது என்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளது. இந்தியா தனது எல்பிஜி கொள்முதலை அமெரிக்கா, நார்வே, கனடா, அல்ஜீரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், 800 டிஎம்டி அளவிலான உறுதிசெய்யப்பட்ட இறக்குமதி சரக்குகள் ஏற்கனவே பெறப்பட்டு, அவை இந்தியாவிற்கு வந்து கொண்டு இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் எல்பிஜி உள்கட்டமைப்பு கணிசமாக விரிவடைந்துள்ளதாகவும், இது விநியோக சவால்களை சமாளிக்கும் நாட்டின் திறனை வலுப்படுத்தியுள்ளது என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டி இருக்கிறது. நாட்டின் எல்பிஜி விநியோகம் குறித்து தேவையற்ற பீதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் தவறான தகவல்களை நம்புவதை தவிர்த்து, அதிகாரப்பூர்வ மூலங்களிலிருந்து பெறப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறு நாட்டு மக்களை வலியுறுத்தி உள்ளது.

முன்னதாக இந்தியாவின் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) விநியோகம் சீரடைய நான்கு ஆண்டுகள் ஆகலாம் என்று ஒருசில தகவல்கள் சோஷியல் மீடியாக்களில் பரவின. இதனால் நாட்டு மக்களிடையே கடும் பீதி ஏற்பட்டது. இதன் காரணமாகவே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் (MoPNG) இத்தகைய கூற்றுகள் தவறானவை மற்றும் துல்லியமற்றவை என்றும், இது போன்ற தகவல்கள் நாட்டின் விநியோக நிலைமை குறித்து ஒரு தவறான புரிதலை ஏற்படுத்துகிறது என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Ministry of Petroleum and Natural Gas ,Delhi ,Union Petroleum and Natural Gas Ministry ,
× RELATED இந்தியாவின் மக்கள் வேறு, பாஜக வேறு;...