புதுச்சேரி, ஏப். 16: போதை பொருள் கடத்தல் வழக்கில் கடலூர் முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. புதுச்சேரி அண்ணாநகரில் செயல்பட்ட லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு கடந்த 2003ல் ஆந்திராவில் இருந்து விலை உயர்ந்த போதை பொருள் பார்சல் கடத்தி வரப்பட்டு இருப்பதாக சென்னையில் உள்ள மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு அதிகாரிகள், புதுச்சேரி அண்ணா நகர் வந்து சம்பந்தப்பட்ட டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை சுற்றி வளைத்து கண்காணித்தனர். அப்போது கடலூரை சேர்ந்த ராமதாஸ் (65) என்பவர், டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு வந்து, போதை பொருள் பார்சலை வாங்கிச் சென்றார்.
அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில், அந்த போதை பொருளை சென்னை வழியாக இலங்கை, தாய்லாந்து மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு விற்பதற்காக கடத்திச் செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, போதை பொருளை கைப்பற்றினர். அந்த போதை பொருளின் அப்போதைய மதிப்பு ரூ.5 கோடி இருக்கும். இவ்வழக்கு புதுச்சேரி போதை பொருள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தி (3வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம்) நடந்து வந்தது. 22 வருடங்களுக்கும் மேலாக நடந்த இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கினை நீதிபதி கோதண்டராஜ் விசாரித்து, குற்றவாளி ராமதாசுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். இவ்வழக்கை மத்திய அரசின் போதை பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு வழக்கறிஞர் பிரவீன்குமார் திறம்பட நடத்தினார்.
