வலசாட்: குஜராத் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தேர்தல் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வலசாட் மாவட்டத்திற்கு உட்பட்ட உமர்காவ் பகுதி தேர்தல் அதிகாரியாக டி.சி. பிராமண்கட்ச் பணியாற்றி வந்தார். அங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பிராமண்கட்ச் அந்தப் பகுதியில் வந்த ரயிலின் முன் திடீரென பாய்ந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு ஏராளமான போலீசார் விரைந்து ெசன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில்வே போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், ‘இது தற்கொலை வழக்கு என்பது உறுதியாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான சரியான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில் அரசு அதிகாரி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
