×

உத்தராகண்ட் சுற்றுலாவிற்கு புதிய உத்வேகம்.! தெஹ்ரி அணை நீர்த்தேக்கத்தில் நடத்தப்பட்ட முதல் கடல் விமான சோதனை வெற்றி

உத்தராகண்ட் மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த விரைவில் மிதக்கும் விமான சேவையை துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தெஹ்ரி ஏரியில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட கடல் விமானச் சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாவட்ட சுற்றுலா அதிகாரி சோபத் சிங் ராணா தகவல் தெரிவித்தார்.

இந்த சோதனையை ‘Sky Hop Aviation’ நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டது. கடல் விமானம் (Seaplane) என்பது தண்ணீரில் புறப்பட்டு, தண்ணீரில் தரையிறங்கும் திறன் கொண்ட ஒரு சிறப்பு விமானம் ஆகும். இவை முக்கியமாக சுற்றுலா மற்றும் பிராந்திய இணைப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக சாலை வசதி இல்லாத இடங்களுக்கு செல்ல உதவுகின்றன.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரிஷிகேஷ் தடுப்பணையில் 19 இருக்கைகள் கொண்ட கடல் விமானம் தனது இரண்டாவது சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் சுற்றுலா ஒரு புதிய மைல்கல்லை எட்டியது. கங்கையில் நல்ல முறையில் புறப்பட்ட விமானம் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, இந்த தனித்துவ சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், அதிகாரிகள் தெஹ்ரி ஏரியில் அடுத்த சோதனையை நடத்தத் திட்டமிட்டனர்.

இதனை தொடர்ந்து தற்போது தெஹ்ரி ஏரியில் கடல் விமானத்தை நீரில் இறக்கி வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான தெஹ்ரி அணையின் நீர்த்தேக்கத்தில், ‘Sky Hop Private Limited’ நிறுவனத்தால் நடத்தப்பட்ட கடல் விமான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தச் சோதனை செயல்முறை நீண்ட காலமாக நடைபெற்று வந்தது; பல தடைகளுக்குப் பிறகு, இறுதியாக தற்போது நிறைவுற்றுள்ளது.

ஜாலி கிராண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட குறிப்பிட்ட கடல் விமானம், கோட்டி காலனி பகுதியில் அமைந்துள்ள தெஹ்ரி ஏரியில், நேற்று மாலை சுமார் 5:30 மணியளவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அந்த ஏரியில் சோதனை முறையில் இரண்டு முறை கடல் விமானம் பிரச்சனைகள் ஏதுமின்றி தரையிறங்குகிறதா மற்றும் சரியாக மேலெழும்புகிறதா என்றும் பரிசோதிக்கப்பட்டது.

இதனிடையே நிறுவன அதிகாரிகளின் கூற்றுப்படி, தெஹ்ரி ஏரியில் கடல் விமானத்திற்கான கூடுதல் சோதனைகள் இன்றும் (புதன்) மற்றும் வியாழன் ஆகிய நாட்களிலும் நடத்தப்பட உள்ளன. இந்தச் சோதனைகள் முழுமையாக வெற்றி பெற்ற பின்னரே, இத்திட்டத்திற்கான இறுதி வடிவம் முடிவு செய்யப்படும். தெஹ்ரி ஏரியில் கடல் விமான சேவையைத் தொடங்குவது ,உத்தராகண்ட் மாநிலத்தின் சுற்றுலாவிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று சுற்றுலாத் துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இது, தொலைதூர மற்றும் எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு உடனடியான மற்றும் எளிமையான விமான இணைப்பை ஏற்படுத்தி தரும் என்கின்றனர்.

Tags : Uttarakhand ,Tehri Dam reservoir ,Lake Tehri ,District Tourism Officer ,Sobat Singh Rana ,
× RELATED தென் பெண்ணையாறு விவகாரத்தில்...