×

பாஜ ஒரு விஷ கிருமி போலி; கோவாவுல 3 காஸ் தர்றேன்னு சொல்லி ஆட்சிக்கு வந்து 3 வருஷம் ஆகியும் தரல… டபுள் இன்ஜின் அரசு ஏன் கொடுக்கல கிரிஷ் சோடங்கர் சாடல்

தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நீலகிரியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ராகுல் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். இந்த முறை சட்டமன்ற தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 28 இடங்களிலும் வெற்றி பெறும். பாஜ ஒரு விஷ கிருமி. எனவே, தமிழக மக்கள் பாஜவின் வருகையை நிராகரிப்பார்கள். தமிழகத்தில் பாஜவிற்கு இடமில்லை.

காங்கிரஸ், திமுக, மற்றும் பிற கூட்டணிக்கட்சிகளின் தொண்டர்கள் ஒற்றுமையாக பணியாற்றி வருகின்றனர். மற்ற மாநிலங்களை பாஜ அழித்தது போல தமிழகம் அழிந்து போவதை நாங்கள் விரும்பவில்லை. பாஜ என்ற விஷம் தமிழகத்திற்குள் நுழைவதை நாங்கள் விரும்பவில்லை. அதனால் தான் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் திமுகவின் கீழ் ஒன்றுபட்டுள்ளனர்.

எங்களது கட்சியில் இருந்த ஒரு சிலர் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்பினர். நாங்கள் திமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு, அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு அங்கே சேர்ந்துவிட்டனர். அவ்வளவுதான். மற்றபடி கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். நான் கோவாவிலிருந்து வருகிறேன். மூன்று சிலிண்டர் வாக்குறுதியை 2022 கோவா சட்டமன்றத் தேர்தலின் போது அவர்கள் அளித்தனர். இப்போது கோவாவிலும் பாஜ ஆட்சி தான், மத்தியிலும் பாஜ ஆட்சி தான். இப்போது நாம் 2026ல் இருக்கிறோம். கோவாவில் எத்தனை சிலிண்டர்களை விநியோகித்தார்கள்.

கோவாவில் மட்டுமல்ல, உத்தரகாண்டிலும் இதை அறிவித்தார்கள். எனவே, தேர்தல் நடக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்கள் பொய்களை விற்கிறார்கள். காங்கிரஸ் பொய் சொல்லாது. முதலில் அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள். நரேந்திர மோடி ரூ.15 லட்சம் மாற்றப்படும், கருப்பு பணம் திரும்ப வரும் என பெரிய வாக்குறுதிகளை அளித்தார். பாஜவே ஒரு போலி, பாஜவின் தேர்தல் அறிக்கையும் போலி.
இவ்வாறு அவர் கூறினார்.

* கிரிஸ் ஜோடங்கர் வந்த ஹெலிகாப்டரில் சோதனை
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கிரிஸ் ஜோடங்கர் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமசந்திரனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக நேற்று கோவையில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தார். அவருடன் தெலங்கானா அமைச்சர் உத்தம்குமார் ரெட்டியும் வந்தார்.

அப்போது, அங்கு தயாராக இருந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கிரிஸ் ஜோடங்கர் வந்த ஹெலிகாப்டருக்கு விரைந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து ஜோடங்கர் இறங்கியவுடன், ஹெலிகாப்டரை சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றனர். அதற்கு அவரும் சம்மதித்தார். தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த ஹெலிகாப்டரில் சோதனை மேற்கொண்டனர். ஆனால், ஹெலிகாப்டரில் எதுவும் சிக்கவில்லை.

Tags : BJP ,Goa ,Krish Chodankar ,Tamil Nadu Congress ,Rahul ,Tamil Nadu ,Congress party ,
× RELATED டெல்லி ஏகாதிபத்தியத்தின் முனை முறிந்து நொறுங்கி போகும்: வைகோ ஆவேசம்