×

பிரசாரம் முடிய 7 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேசிய தலைவர்கள் முற்றுகை: நாளை மோடி நாகர்கோவிலில் ரோடு ஷோ

சென்னை: தமிழக தேர்தலில் பிரசாரம் முடிய 7 நாட்களே உள்ள நிலையில், தேசிய தலைவர்கள் முற்றுகையிடத் தொடங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாளை நாகர்கோவிலில் 1 கி.மீ. தூரம் ரோடு ஷோ நடத்தி, வாக்கு சேகரிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார். ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரது வருகை குறித்து 2 நாளில் முடிவு எடுக்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 23ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக கூட்டணிக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 கட்ட சுற்றுப் பயணத்தை முடித்து, 3வது கட்ட பயணத்தை தொடங்கியுள்ளார். திமுக கூட்டணியில் உள்ள தலைவர்களும் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். குறிப்பாக தேமுதிக தலைவர் பிரேமலதா, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், நடிகர் கமலஹாசன் 17ம் தேதி பிரசாரத்தை தொடங்குகிறார். அதேபோல பல நடிகர்கள் பட்டாளமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தேசிய தலைவர்கள், கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

அதேபோல அதிமுக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாநில முதல்வர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பிரசாரம் செய்கின்றனர். இந்தநிலையில், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை (15-ம் தேதி) மாலை தமிழகம் வருகிறார். முதற்கட்டமாக அவர், குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதற்காக நாளை மாலை 3 மணிக்கு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இருக்கும் ஹெலிபேடில் வந்திறங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து காரில் பீச் ரோடு சந்திப்பு, செட்டிக்குளம் சந்திப்பு வழியாக வேப்பமூடு காமராஜர் சிலை சந்திப்பு வந்தடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து வடசேரி எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு வரை சுமார் 1 கி.மீ. தூரம் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். பிரதமர் மோடி ரோடு ேஷாவில், முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்றுகிறார். இருவரும் இணைந்து வாக்கு சேகரிக்கிறார்கள். பிரதமர் வருகையையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு படை அதிகாரிகள், நாகர்கோவிலில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்து வருகிறார்கள். நாளை மாலை 4 மணிக்கும் தொடங்கும் ரோடு ஷோ சுமார் 1 மணி நேரம் நடைபெறும் என கூறப்படுகிறது.

ரோடு ஷோ நடக்கும் சாலையின் இருபுறத்திலும் தொண்டர்கள் நிற்க வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் இன்றும் போலீசார் மோப்ப நாய் சோதனை நடத்தினர். நாளை மாலை இந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட உள்ளன. பிரதமர் பாதுகாப்பு பணிக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வந்துள்ளனர். பிரதமர் வருகையையொட்டி நாகர்கோவிலில் நகரில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட உள்ளது. மதியம் 12 மணி முதல் இரவு 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும். எனவே வெளியூர் செல்பவர்கள், ரயில் நிலையம், விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே மாற்றம் செய்து திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதேநேரத்தில், ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோர் பிரசாரம் தொடங்குவது குறித்து 2 நாளில் முடிவுகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், நேற்றிரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு, ராகுல்காந்தி மற்றும் தெலங்கானா, கர்நாடகா முதல்வர்கள் வருகை தர உள்ளனர். அனைத்து தொகுதிகளுக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ராகுல்காந்தி, தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வருவது குறித்து, விரைவில் அறிவிக்கப்ப்டும். பிரியங்கா காந்தியும் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழ்நாட்டுக்கு வருகிறார். ராகுல்காந்தி- மு.க.ஸ்டாலின் இணைந்து கண்டிப்பாக தேர்தல் பிரசாரம் செய்யவர்கள்.

புதுச்சேரிக்கு ராகுல்காந்தி வந்த போது, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுக்கூட்டம் இருந்தது. ராகுல் காந்தியும் அவசரமாக கேரள மாநிலத்துக்கு பிரசாரத்திற்கு செல்ல வேண்டியது இருந்தது. இதனால் புதுச்சேரியில் இருவரும் ஒன்றாக, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. தேர்தல் நடந்து முடிந்துள்ள 3 மாநிலங்களில், ராகுல்காந்தி தேர்தலுக்கு பிரசாரம் செய்தார். அடுத்ததாக தமிழ்நாட்டிற்கு வர ராகுல்காந்தி ஆர்வமாக உள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 16ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடப்பதால் ராகுல்காந்தி, தமிழ்நாட்டிற்கு தேர்தல் பிரசாரத்திற்கு வருவதற்கான தேதிகள் முடிவு செய்து அறிவிக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் சுமார் 75% இடங்களில் வெற்றி பெற்றது. வரும் தேர்தலில், காங்கிரஸ், 100% வெற்றியுடன் 28 தொகுதிகளிலும் வெற்றி பெற முழுமையாக செயலாற்றி வருகிறது. இந்த 28 தொகுதிகளில் மட்டுமில்லாமல் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம். ராகுல்காந்தி தமிழ்நாடு தேர்தல் பிரசாரம் வருகை குறித்து, 2,3 நாட்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு கிரிஷ் சோடங்கர் கூறினார்.

தேர்தல் பிரசாரம் முடிய ஒரு வாரமே உள்ள நிலையில், தேசிய தலைவர்கள் தமிழகத்தை முற்றுகையிடத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tamil Nadu ,Modi ,Nagarkov ,Chennai ,PM Modi ,
× RELATED டெல்லி ஏகாதிபத்தியத்தின் முனை முறிந்து நொறுங்கி போகும்: வைகோ ஆவேசம்