×

மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காகவே ஆடம்பர பொருட்களை வாங்கி பணத்தை இழந்தேன்: தங்கத்தில் முதலீடு செய்ய நடிகை சமீரா அறிவுரை

 

மும்பை: திரைத்துறையில் அங்கீகாரம் பெற ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்ததால் ஏற்பட்ட நிதி இழப்புகள் மற்றும் மன அழுத்தம் குறித்து நடிகை சமீரா ரெட்டி உருக்கமாக பேசியுள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த பாலிவுட் நடிகையான சமீரா ரெட்டி (47), தனது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் சந்தித்த நிதி நெருக்கடி மற்றும் உளவியல் ரீதியான அழுத்தங்கள் குறித்து சமூக வலைதளங்களில் மனம் திறந்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டில் அவர் சந்தித்த ‘ஷாப்பிங்’ மோகம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘எனக்கு 24 வயது இருக்கும்போது, மற்ற நடிகைகள் விமான நிலையத்திற்கு வரும்போது விலை உயர்ந்த பைகளை வைத்திருப்பதை பார்த்து நானும் வாங்கினேன்.

சுமார் 1.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான லூயிஸ் உய்ட்டன் பையை எதற்காக வாங்கினேன் என்றே தெரியவில்லை. மற்றவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காகவே 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேனல் ஜாக்கெட் மற்றும் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான டயார் கவுச்சோ பைகளை வாங்கினேன். பிரபலமான இடத்திற்கு வந்துவிட்டேன் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்பதற்காகவே இவற்றை செய்தேன். அப்போது இருந்த அழுத்தத்தால் என்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டு இத்தகைய பொருட்களை வாங்கினேன்.

அன்றைக்கு அந்த பைகளை வாங்குவதற்கு பதிலாக தங்கத்தில் முதலீடு செய்திருந்தால், இன்று எனக்கு பெரிய அளவில் லாபம் கிடைத்திருக்கும். எனவே, தேவையற்ற ஆடம்பர பொருட்களில் பணத்தை வீணாக்காமல் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள் என்று எனது மகளுக்கும், ரசிகர்களுக்கும் தற்போது அறிவுறுத்துகிறேன்’ என்று சமீரா ரெட்டி கூறியுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு திரைத்துறையை விட்டு விலகி கோவாவிற்கு குடிபெயர்ந்த சமீரா ரெட்டி, தற்போது நேர்மறையான கருத்துகளை பரப்பி வருகிறார்.

Tags : Samira ,Mumbai ,Samira Reddy ,Bollywood ,
× RELATED ஏப்.,15ல் ஜக் விக்ரம் LPG கப்பல் மும்பை...