சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மெட்ரோ ரயிலில் பிரசாரம் மேற்கொண்டார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த விதம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.வழக்கமான பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி, இன்று காலை திடீரென சென்னை மெட்ரோ ரயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏறினார். சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென நுழைந்த முதலமைச்சர், அங்கிருந்த டிக்கெட் கவுன்டருக்கு சென்று டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறினார். ரயிலில் சென்ட்ரலில் இருந்து ஏ.ஜி.டி.எம்.எஸ் வரை அவர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது ரயிலானது அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கை கடந்து சென்றது. ஏ.ஜி.டி.எம்.எஸ்-ல் இறங்கிய அவர் கார் மூலம் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளைப் போலவே, கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு நின்றபடியே அவர் பயணம் செய்தார். இந்த எளிமையான அணுகுமுறை அங்கிருந்த பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. பயணத்தின் போது, அருகிலிருந்த பயணிகளிடம் அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்கள் குறித்து முதல்வர் கேட்டறிந்தார். “திராவிட மாடல் ஆட்சி உங்களுக்கு எப்படிப் பயனுள்ளதாக இருக்கிறது?” என்று அவர் கேட்டபோது, பெண்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாகப் பதிலளித்தனர். அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட முதல்வர், வரும் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொண்டார்.
முதலமைச்சர் ரயிலில் இருப்பதை அறிந்த பயணிகள், ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் அவரை நோக்கி வரத் தொடங்கினர். குறிப்பாக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் முதல்வருடன் செல்ஃபி எடுக்க ஆர்வம் காட்டினர். அவரும் சோர்வின்றி அனைவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு பயணியின் குழந்தையைத் தூக்கி கொஞ்சி விளையாடியது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது. மேடைப் பேச்சுகள் மற்றும் பொதுக்கூட்டங்களைத் தாண்டி, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் இந்த முயற்சி, தேர்தல் களத்தில் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. முதலமைச்சரின் இந்த மெட்ரோ ரயில் பயண வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.முதலமைச்சரின் இந்த எளிய பயணம், அவர் எப்போதும் மக்களோடு இருப்பவர் என்பதைக் காட்டும் விதமாக அமைந்திருந்தது என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ வாசத்தில் இருந்து, தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன் மெட்ரோ பயணம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: காலை பயணம் சென்னை மெட்ரோவில் சென்னைக்கே உரிய காலையின் சுறுசுறுப்புடன் பணிக்குச் செல்லும் மக்களிடம் உதயசூரியனுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிச் சின்னங்களுக்கும் வாக்கு சேகரித்தேன். மெட்ரோ வாசத்தில் இருந்து, அடுத்து தஞ்சையின் மண்வாசனை நோக்கிப் புறப்படுகிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
