தூத்துக்குடி, ஏப். 9: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் மொத்தம் 1868 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 203 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 246 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 203 கிராமங்களில் தேர்தலின் போது பிரச்னையை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களாக 347 பேர் அடையாளம் காணப்பட்டு உதவி கலெக்டர் முன்னிலையில் பிணைப்பத்திரம் செலுத்தி உள்ளனர். இதே போன்று மொத்தம் 596 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு வழக்குகளில் சிக்கி கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர்களை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி சுமார் 2 ஆயிரத்து 75 பேரை போலீசார் பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர்.
