காரிமங்கலம், ஏப். 9: தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் உள்ள காரிமங்கலம் வழியாக செல்லும் பெரும்பாலான பஸ்கள், ஊருக்குள் செல்லாமல் பைபாஸ் சாலையிலேயே செல்வதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், காரிமங்கலம் பேரூராட்சியில் கடை வீதி முதல் ராமசாமி கோயில் வரை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், ஊருக்குள் பஸ்கள் செல்வது தடை செய்யப்பட்டு பைபாஸ் சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்று வந்தது. இந்த பணிகள் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், பெரும்பாலான தனியார் பஸ்கள் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் மட்டும் சென்று வந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அந்த வழியாக செல்லும் டவுன் பஸ்களில் செல்லும் நிலை ஏற்பட்டது.
வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்கள், காரிமங்கலம் நகருக்குள் பஸ்கள் செல்லாததால், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இறக்கி விடப்பட்டு நீண்ட தூரம் நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தினகரன் நாளிதழிலில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து கலெக்டர் சதீஷ் உத்தரவின் பேரில், பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் அதிகாரிகள் பெரியாம்பட்டி, காரிமங்கலம் பைபாஸ் ரோடு மற்றும் பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். அப்போது, விதிமுறைகளை மீறி ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலையில் சென்றதுடன் கூடுதல் கட்டணம் வசூலித்தது கண்டறியப்பட்டது. சுமார் 40க்கும் மேற்பட்ட பஸ்களில் சோதனை மேற்கொண்டு, பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, சம்மந்தப்பட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதே நிலை நீடித்தால், விதிமுறைகளை மீறும் பஸ்களுக்கு உரிய அபராதம் விதிப்பதுடன், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
