நாகப்பட்டினம், ஏப்.8: நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் நேற்று நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையில் ஒரு சுயேட்சை வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30ம் தேதி தொடங்கியது. நாகப்பட்டினம் சட்டசபை தொகுதிக்கு நாகப்பட்டினம் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணனிடமும், கீழ்வேளூர் தொகுதிக்கு கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜலட்சுமியிடமும், வேதாரண்யம் சட்டசபை தொகுதிக்கு வேதாரண்யம் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணனிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.கடந்த 30ம் தேதி நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பாத்திமா பர்ஹானா, நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் உசைன்பீவி, சுயேட்சை வேட்பாளர்கள் பாஸ்கரன், விஜயராகவன் என 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து 2ம் தேதி சுயேட்சை வேட்பாளர் பிரேம் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கடந்த 4ம் தேதி அதிமுகவை சேர்ந்த தங்ககதிரவன் 3 வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக மாற்று வேட்பாளர் ராதாகிருட்டிணன், தமிழக வெற்றிக்கழகத்தை சேர்ந்த சுகுமார், சுயேட்சை வேட்பாளர்கள் அய்யங்காளை, சக்திவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் பாத்திமா பர்ஹானா 2 வேட்பு மனுக்கள், நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் ஹூசைன்பீவி என 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 6ம் தேதி திமுக கூட்டணி கட்சியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் வேட்பாளர் ஜவாஹிருல்லா, மாற்று வேட்பாளர் முகம்மது பாதுஷா, சுயேட்சை வேட்பாளர் கதிரவன், தமிழக வாழ்வுரிமை கட்சி வல்லபதாஸ், தமிழக வெற்றிக் கழகம் மாற்று வேட்பாளர் அகம்மது தம்பி மரைக்காயர், சுயேட்சை வேட்பாளர்கள் துரை, சதீஷ்கண்ணா, புதிய தமிழகம் கட்சி ராஜசேகர் என 8 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நிறைவு நாளான நேற்று முன்தினம் நாகப்பட்டினம் சட்டசபை தொகுதியில் 23 வேட்பு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது.நேற்று (ஏப்.7ம் தேதி) வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலையில் நடந்தது.
இதில் சுயேட்சை வேட்பாளர்கள், அனைத்து கட்சி வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.வேட்பு மனு பரிசீலனையின் போது ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு வேறு தொகுதியை சேர்ந்த வாக்காளர் முன்மொழிவு செய்ததால் அந்த மனு நிராகரிக்கப்பட்டது.அதே போல் கட்சிகளின் வேட்பாளர்களின் முதல் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மற்ற அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல் மாற்று வேட்பாளர் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வேதாரண்யம்:வேதாரண்யம் தொகுதியில் 22 மனுக்கள் (கட்சிகள் 11, சுயேட்சை 11) தாக்கல் செய்துள்ளதில் நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பரிசீலனை நடந்தது. இதில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்பட கட்சிகளின் வேட்பு மனுக்களுடன் 17 மனுக்கள் ஏற்கப்பட்டது. 5 சுயேட்சை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
