பழநி, ஏப். 8: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை, வெயில் என மாறி மாறி காலநிலை மாறி வருகிறது. இதனால் பலருக்கும் அம்மை, வயிற்றுப்போக்கு, வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த சீதோஷ்ண காலத்தில் மஞ்சள்காமாலையும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் நோய் பாதிப்புகள் வராமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவித்ததாவது:
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆற வைத்த பிறகு குடிக்க வேண்டும். மழை தண்ணீரை சேமித்து வைப்போர் நன்றாக காய்ச்சி ஆற வைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். தண்ணீர் சேமித்து வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை தேங்காய் நார் அல்லது பிரஷ் கொண்டு நன்கு தேய்த்து சுத்தம் செய்து காய வைத்து பின்னர் தண்ணீரை நிரப்ப வேண்டும். வீடுகளை சுற்றி உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் உபயோகப்படுத்தப்படாத டயர்கள், ஆட்டு உரல், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இதன்மூலம் கொசு உற்பத்தியாவது தடுக்கப்பட்டு டெங்கு, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல் வராமல் தடுக்க முடியும். பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
