இலங்கை கடற்படையினரால் பல்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இலங்கைக்கான இந்திய தூதரகம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த தகவலை தெரிவித்து உள்ளது.
இவர்கள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டு, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இலங்கையிலிருந்து விடுவிக்கப்பப்பட்ட 30 மீனவர்களும் தற்போது வீடு திரும்பி கொண்டிருக்கின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விடுவிக்கப்பட்டு உள்ள 30 இந்திய மீனவர்ககளில் 21 பேர் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள்; மற்ற 9 பேர் காரைக்காலைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்திய தூதரகத்தின் தொடர் முயற்சிகளால் இவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் மீனவர் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வரும் சர்ச்சைக்குரிய விஷயமாகும். இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாகக் கூறப்படும் பல சம்பவங்களில், பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் ஒரு குறுகிய நீர்ப்பரப்பான பாக் நீரிணை, இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களுக்கும் ஒரு செழிப்பான மீன்பிடித் தளமாகத் திகழ்கிறது. இந்த சூழலில் இரு நாடுகளைச் சேர்ந்த மீனவர்களும், அறியாமலேயே ஒருவருக்கொருவர் எல்லைக்குட்பட்ட நீர்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக கூறி அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர்.
இதனிடையே இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் சென்னை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும், முறையான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் குடிவரவு நடைமுறைகளுக்குப் பிறகு, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் தத்தம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். முன்னதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா , இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களின் பிரச்சினை ஒரு தீராத பிரச்சினை என்றும், இரு தரப்பினரும் மீன்பிடித்தலையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டிருப்பதால் இது விரைவில் தீராது. இதற்கான தீர்வு சட்டரீதியானது அல்ல, பொருளாதாரம் சார்ந்தது என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்திருந்தார்.
