×

ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுகாதாரத்துறைக்கு முக்கியத்துவம்

ஓட்டப்பிடாரம், ஏப். 7: ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மக்களை காக்கும் சுகாதாரத் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று அமமுக வேட்பாளர் சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக வேட்பாளராக சுந்தரராஜ் போட்டியிடுகிறார். இவர், நேற்று ஓட்டப்பிடாரம், புதுக்கோட்டை பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பெண்கள் பலரும் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பிரசாரத்தில் வேட்பாளர் சுந்தரராஜ் பேசுகையில், நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை செய்து கொடுத்தேன். மேலும் பல புதிய திட்டங்கள் கிடைக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டேன். ஒரு தொகுதி முன்னேற வேண்டுமெனில் சுகாதாரத் துறையில் மருத்துவம் என்பது மிகவும் முக்கியமானது. பல இடங்களில் மக்கள் சுகாதார மேம்பாட்டு வசதிகள் செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை நவீன வசதிகளுடன் சிறந்த மருத்துவமனையாக முழுமையானதாக தரம் உயர்த்தப்படும். இரவு நேர மருத்துவர்கள் பணி அமர்த்தப்படுவர். புதுக்கோட்டை, ஒட்டநத்தம், புதியம்புத்தூர், எஸ்.கைலாசபுரம் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் நவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும். மேல அரசரடி, கொல்லங்கிணறு, போடம்மாள்புரம், சிறுபாடு, கோரம்பள்ளம், மேலத்தட்டப்பாறை, அத்திமரப்பட்டி, முடிவைத்தானேந்தல் துணை ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும். மேலும் வல்லநாடு, ஒட்டநத்தம் ஆகிய ஆரம்ப சுகாதார மையத்தில் சித்த மருத்துவத்திற்கு தனிக் கட்டிடம் கட்டி தரப்படும். மக்கள் வாழும் கிராமங்களுக்கு அருகிலேயே சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறிய அளவிலான சுகாதார மையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும், என்றார். பிரசாரத்தில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், அயில்குமார், நிர்வாகி அருமைநாயகம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Tags : Audtapidaram ,AMUKA ,SUNDARRAJ ,ODAPIDARAM ,Ammuka ,National Democratic Alliance ,Otapidaram ,Assembly Constituency ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கண்காணிப்பு குழு அறை