2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் தனது தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே சகுனிக்கும் பாஜக-விற்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முத்தரசன் விமர்சித்து உள்ளார். ஆண்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர் மகாராஜனை ஆதரித்து முத்தரசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் மக்களிடையே பேசிய முத்தரசன், மகாபாரதத்தில் வரும் சகுனி, துரியோதனானோடு நட்பாக பழகுவது போல பழகி, அவனோடு சேர்ந்து உறவாடி அவன் படையை அழித்ததாகவும், அந்த சகுனிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது என்றும் கடுமையாக சாடினார்.
பாஜக என்ற சகுனி தமிழகத்தை கைப்பற்ற நினைப்பதாகவும், அதனை எதிர்த்து தங்கள் போராடுவதாகவும் முத்தரசன் குறிப்பிட்டார். மத்திய அரசானது தமிழக மக்கள் மற்றும் மாநில அரசுக்கு எதிராக அரசியல் போர் நடத்துவதாகவும், அவர்களின் சித்தாந்தத்தை இங்கு வலுக்கட்டாயமாக திணிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தனித்து நின்று காலூன்ற முடியாத பாரதிய ஜனதா கட்சி, அதிமுக-வை வைத்தே தமிழகத்தில் வளர்ந்து விடலாம் என்று கணக்கு போட்டு வேலை பார்க்கிறது என்று முத்தரசன் விமர்சித்துள்ளார்.
