தூத்துக்குடி, ஏப். 6: கடந்த 2022ம் ஆண்டு இலங்கையில் இருந்து அத்துமீறி நுழைந்த ஒரு விசைப்படகைக் கடத்தல்காரர்களுடன் சேர்த்து தருவைகுளம் கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்தப் படகு தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த விசைப்படகு தருவைகுளம் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் திடீரெனத் தீப்பிடித்தது. கடல் காற்று பலமாக வீசியதால் தீ மளமளவெனப் படகு முழுவதும் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் விசைப்படகின் 80 சதவீதப் பகுதி எரிந்து சேதமானது. எரிந்து போன படகின் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் எனத் தெரிகிறது.
