புதுடெல்லி: புதுச்சேரி, கேரளா, அசாமில் வரும் 9ம் தேதி ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் வரும் 23, 29ம் தேதிகளில் 2 கட்டமாகவும், தமிழ்நாட்டில் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால் ரூ.50 ஆயிரத்துக்குள் மட்டுமே ரொக்கமாக பணத்தை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. அதற்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.
சட்டவிரோதமாக பணம், பரிசுப் பொருட்கள், மதுபானங்களை கண்டுபிடிக்க தேர்தல் பறக்கும் படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் நேற்று வரை 5 மாநிலங்களில் ரூ.650 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணம், மதுபானம், போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் பாதிக்கும் மேல், அதாவது ரூ.391 கோடி மேற்கு வங்கத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.170 கோடி, அசாமில் ரூ.97 கோடி, புதுச்சேரியில் ரூ.7 கோடி, கேரளாவில் ரூ.58 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. புகார் பெறப்பட்டதும் 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய 5,173க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பல்வேறு இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகளை அமைப்பதற்காக, 5,200க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.
