×

அமுதென்பதா… விஷமென்பதா…அமுத விஷம் என்பதா..?

நன்றி குங்குமம் தோழி

இயற்கை 360°

‘விளக்கெண்ணெ..!’ என யாரையேனும் கடிந்து கொள்ள உபயோகப்படும் இந்த வார்த்தைக்குப் பொருள், ‘வழவழ கொழகொழ’ தன்மையுடன் கூடிய எண்ணெயைப் போல் சிந்தனைகளிலும் முடிவுகளிலும் உறுதியற்று இருப்பதுதான் என்பதை உணர்த்தவே. ஆனால், உண்மையிலேயே இந்த விளக்கெண்ணெயால் உபயோகம் எதுவும் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள, இந்த வார இயற்கை 360°யில், வேலியோர விதைகள் தரும் எண்ணெயான விளக்கெண்ணெயை பற்றித் தெரிந்துகொள்வோம்..!

ஆமணக்கு..! கை போன்ற இலைகள், அடுக்கடுக்கான காய்கள், காய்ந்த காய்களுக்குள்ளே பழுப்பு நிற விதைகள் என வேலியோரங்களில், புதர்களாகக் காணப்படும் ஆமணக்குச் செடியின் தாவரப்பெயர் Ricinus communis. தோன்றிய இடம் இந்தியா. இதில், சிற்றாமணக்கு, பேராமணக்கு என்ற இரண்டு வகைகள் உபயோகத்தில் இருந்தாலும் பயன்கள் ஒன்று போலத்தான் என்பதால் பொதுவாக ஆமணக்கு குறித்தே பார்ப்போம்.

கொட்டைமுத்து, முத்துக்கொட்டை, சித்திகரம், தலரூபம், ஏரண்டம் என்ற பெயர்களுடன் நம்மிடையேயும், அரலெண்ணெ, அயனம், ஜதா, அரண்டி என பிற மாநிலங்களிலும், சிதர்பீஜ, வாதாரி என வடமொழியிலும் Palma Christi, Maple weed, Wonder beans எனும் பெயர்களுடன் ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும், Castor என்பதே இதன் வழங்கு பெயராய் இருக்கிறது. இந்த ஆமணக்குச் செடிகளின் விதைகளிலிருந்து பெறப்படுவதே விளக்கெண்ணெய் எனும் ஆமணக்கு எண்ணெய் அதாவது, ஆங்கிலத்தில் Castor oil.

ஆமணக்கு விதைகளை, குறிப்பாக அதிலிருக்கும் ரிஸின் எனும் ஒரு வேதிப்பொருளை, உயிர்க்கொல்லி என எச்சரிக்கின்றன மருத்துவ நூல்கள். அதாவது ‘Ricin is an Organic Poison.!’ இச்செடியில் எதில் உள்ளது நன்மை..? எதில் உள்ளது நச்சுத்தன்மை.?

ஆமணக்குச் செடியின் அனைத்து பாகங்களும் நச்சுத்தன்மை உடையவை என்றுகூறும் அறிவியல், ஆமணக்கு விதைகளை உட்கொள்ளும்போது, ‘Ricin’ என்ற தாவர விஷம் (Phytotoxin) வெளிப்பட்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி, கண் எரிச்சல், மூச்சுத்திணறல் தொடங்கி, பின்பு இதயம் முதல் சிறுநீரகம் வரை பல உறுப்புகளிலும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும், சமயத்தில் மரணம்கூட சம்பவிக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறது.

ஆனாலும், ஆமணக்கின் முக்கியப் பயன்பாடாய் இருப்பதும் அதன் விதைகளே. வயிற்றில் பூச்சித்தொல்லை, வயிற்று வலி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம் என பல வயிற்றுத் தொல்லைகளுக்கு விளக்கெண்ணெய் குடித்த நினைவுகள் பலருக்கும் நிச்சயம் இருக்கும். அப்படியிருக்க, இதனை ‘அமுதென்பதா… விஷமென்பதா… அமுத விஷம் என்பதா.?’ எனும் கேள்வியும் எழுகிறதல்லவா? உண்மையில், ஆமணக்கு விதைகளிலிருந்து பெறப்படும் விளக்கெண்ணெயில் நச்சுத்தன்மை அறவே இல்லை என்று விளக்கமளிக்கிறது அறிவியல்.

ஆம்! ஆமணக்கு விதைகளின் வெளித்தோலில்(Shell) நீரில் கரையும் நச்சுப்பொருளான ரிஸின்(ricin) எண்ணெயைப் பிரித்தெடுத்த வெண்ணிறக் கழிவுகளிலேயே வடிகட்டப்படுவதால், விளக்கெண்ணெயில் நச்சுத்தன்மை இல்லை என்பதுடன், மீண்டும் சுத்திகரிக்கப்படும் கொதிநிலையில் விஷத்தன்மை முற்றிலும் நீங்கி, நற்பயனளிக்கிறது என்பதுதான் உண்மை. விளக்கெண்ணெய் முற்றிலும் பாதுகாப்பானதே என்றுகூறும் அமெரிக்க மருத்துவக்கழகம், GRAS (Grossly Recognized As Safe) என்றும் சான்றளித்துள்ளது.

விளக்கெண்ணெயில் 90 சதவிகிதமும் அதிகம் தென்படும் ரிசினோலிக் அமிலம் மற்றும் பிற கொழுப்பு அமிலங்களான ஒலிக் அமிலம், லினோலிக் மற்றும் லினோலெனிக் அமிலங்கள், ஸ்டியரிக் அமிலம், ட்ரை-கிளைசைரைடுகள், ஆல்கலாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ சத்து போன்றவை இதன் மருத்துவ குணங்களுக்குக் காரணமாக அமைகின்றன.

பொதுவாக, குடற்புழுக்கள், குடல் அழற்சி நோய், அஜீரணம், மலச்சிக்கல், மூல நோய் ஆகியவற்றில், அதன் Purgative அதாவது, மலமிளக்கும் தன்மையால், விளக்கெண்ணெய் நேரடியாக குடிக்கத் தரப்படுகிறது. மேலும் உடல் சூட்டைத் தணிக்கவும், நோயெதிர்ப்புத் திறனைக் கூட்டவும், உடற் பருமனைக் குறைக்கவும், பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கும் தீர்வாய் அமைகிறது.

இதில் உள்ள ரிசினோலிக் அமிலம், பெண்களின் பிரசவ வலியைக் குறைக்க உதவுவதுடன், பால் சுரப்பதை அதிகரிக்கும் தன்மையும் கொண்டதாகும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் விளக்கெண்ணெயில் அதிக கலோரிகளும் நிறைந்துள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் அதாவது, 15 ml விளக்கெண்ணெயில் 120 கலோரிகள் உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒருநாளில் 15 முதல் 40 ml வரை அளவைத் தாண்டாமல் பயன்படுத்துவதே நல்லதென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெளிப்பூச்சாகவும் பெரும் பயன்களைத் தரும் விளக்கெண்ணெயில் உள்ள Undecylenic acid, புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதுடன், தோல் அழற்சி, படை, சிரங்கு உள்ளிட்ட சரும நோய்களுக்கும் பயனளிக்கிறது. அழகு சாதனப்பொருட்களில் முக்கிய பங்கு வகிக்கும் இதன் கொழுப்பு அமிலங்கள், சருமத்தில் தழும்புகள் மற்றும் கரும்புள்ளிகள் மறையவும், முகப்பருக்கள் குறையவும் உதவுகின்றன.

இதில் உள்ள வைட்டமின் உள்ளிட்ட பல சத்துகள், முடி வளர்ச்சியைக் கூட்டுவதுடன், பொடுகுப் பிரச்னையைக் குறைக்க உதவுகின்றன.மேலும், மூட்டு வலி, தசை வலி, Lumbago எனும் அதீத இடுப்பு வலி, ஆர்த்ரைடிஸ், பக்கவாதத்தில் காணப்படும் திசு மலிவு ஆகியவற்றுக்கும் நன்கு பயனளிக்கின்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு அஜீரணத்தின் போது, சூட்டைத் தணிக்க, விளக்கெண்ணெயை வயிற்றில் தடவுவது அல்லது உள் பாதங்களில் தடவுவது, பல இல்லங்களிலும் பாட்டி வைத்தியமாக வழக்கில் உள்ளது.பருப்பு குழையவும், இட்லி மிருதுவாக இருக்கவும் நமது உணவுகளில் பயன்படும் விளக்கெண்ணெய், மருந்துகள் தயாரிப்பிலும், சோப், க்ரீம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுகின்றன.

ஹைராஜெனேட்டட் காஸ்டர் எனப்படும் இதன் உபப்பொருள், இயற்கை உரங்கள், மசகு எண்ணெய், பெயின்ட், வார்னிஷ், பேப்பர், காலணி ஆகியவற்றை தயாரிக்கவும், இயந்திரத் தொழில்நுட்பங்களிலும், போர்முனைகளிலும் அதிகம் பயன்படுகிறது. பண்டைய காலத்தில் விளக்கெரிக்க பயன்படுத்தியதால் விளக்கெண்ணெய் எனப் பெயர் வந்துள்ளது. Castor என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் ஒளி மிகுந்த என்று பொருள். 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, நின்று நிதானமாக எரியும் தன்மை கொண்ட இதனை, கிரேக்கம், எகிப்து, இந்தியா என உலகெங்கிலும் விளக்காகப் பயன்படுத்தியதாக வரலாறு காணக்கிடைக்கிறது.

வீதியில் வைக்கும் தீவட்டிகளுக்கும் வண்டி சக்கரங்களுக்கு மசகாகவும் விளக்கெண்ணெய் பயன்படுத்தப்பட்டதும், திருவிதாங்கூர் மன்னரின் அரண்மனையிலும் கோட்டைகளிலும் இரவில் எரியும் தீப்பந்தங்கள் பொதுமக்கள் கொண்டு சேர்த்த விளக்கெண்ணெய் ஊற்றியே எரிக்கப்பட்டன என்றும் ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.தோல் நீக்கப்பட்ட இதன் விதைகள் மற்றும் இதன் இலைகள், மருத்துவ குணங்கள் நிறைந்ததால், ‘Palma Christi’ அதாவது, கிறிஸ்துவின் உள்ளங்கை என்று அழைக்கப்படுகிறது.

மருத்துவத்தின் தந்தை எனப்படும் ஹிப்போக்ராட்டிஸ் தனது மருத்துவப் புதினங்களில் விளக்கெண்ணெயின் பலன்களைக் குறிப்பிட்டுள்ளதை, கிரேக்க வரலாறு கூறும்போதே, சமண முனிவர்கள்தான், விளக்கெண்ணெயின் பயன்பாட்டைக் கண்டுபிடித்ததாகவும், சுஷ்சுருத மற்றும் சாரக சம்ஹிதைகளில் இதன் பயன்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதையும் நம்மால் அறியமுடிகிறது. இந்திய & கிரேக்க மருத்துவத்தில் மட்டுமன்றி, ரோமானிய, எகிப்திய மற்றும் சீன மருத்துவ முறைகளிலும் விளக்கெண்ணெயின் நற்பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதேசமயம், மனிதர்களில் நச்சுத்தன்மையை உருவாக்கி உயிரிழப்பு ஏற்படுத்த, வெறும் எட்டு ஆமணக்கு விதைகளே போதுமானது என்றும் கூறப்படுகிறது. ஆமணக்கு விதைகளின் நச்சு விளைவுகளைக் கொண்டு, இவற்றைப் போர்களில் பயன்படுத்திய வரலாற்றையும் நம்மால் அறிய முடிகிறது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது, Biological weapon என ரசாயன மற்றும் உயிரியல் போர் ஆயுதங்களாக ரிஸினை பயன்படுத்த அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டிஷ் நாடுகள் தயாராக இருந்தன என்றும், 1978ல், பல்கேரிய எதிர்ப்பாளர் ஜார்ஜ் மார்க்கோவ் கொல்லப்பட்டது ரிஸின் கலந்த விஷத்தால் என்றும் கூறப்படுகிறது.

தன்னிச்சையாக வெப்பமண்டலப் பகுதிகளில் வளரும் தன்மை கொண்ட ஆமணக்குச் செடிகள், மிளகாய், கத்தரிக்காய் போன்ற நாற்றுகளுக்கு வேலியாகவும், நெல் மற்றும் கரும்புப் பயிர்களுக்கு இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் தனியாகவும் பயிரிடப்படுகிறது.

உலக அளவில் விளக்கெண்ணெய் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாலும், தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் முத்துக்கொட்டை சந்தையில் தனிச்சிறப்பு உடையது.ஆக, அமுதென்பதா… விஷமென்பதா… இதனை அமுத விஷம் என்பதா..? என்றால், விதைகளின் வெளியே விஷமும், அதனை நீங்கிய பின் ஆமணக்கு தரும் ‘வழவழ கொழகொழ’ தன்மையான விளக்கெண்ணெய், பிற செடிகளுக்கு மட்டும் வேலியல்ல, உடலுக்கும் சேர்த்தே என்ற புரிதலுடன்..

(இயற்கைப் பயணம் நீளும்..!)

Tags :
× RELATED உடற்பயிற்சியின் அறிவியல் மருத்துவப் பார்வை!