×

மேலப்பாளையம் கால்நடை சந்தை களைகட்டியது; பங்குனி உத்திர விழாவுக்காக ஆடுகள் விற்பனை அமோகம்

நெல்லை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் இன்று ஆடுகள் விற்பனை களைகட்டியது. கோயில்களில் கிடா வெட்டுவதற்காக பொதுமக்கள் பலர் இன்று சந்தையில் திரண்டனர்.தென்மாவட்டங்களில் குல தெய்வ வழிபாட்டுக்கு பெயர் போன பங்குனி உத்திர விழா இன்று இரவு தொடங்கி கொண்டாடப்பட நாளை இரவு வரை கொண்டாடப்பட உள்ளது. எந்த ஊரில் இருந்தாலும், பங்குனி உத்திரத்தன்று தங்கள் குல தெய்வ கோயிலுக்கு வந்து பொதுமக்கள் சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். இவ்விழாவை ஒட்டி நாளை பிற்பகலில் கிடா வெட்டி பொங்கலிடுவது வழக்கம். இதையடுத்து பொதுமக்கள் சந்தைகளில் கிடாக்களை விலை கொடுத்து வாங்கி கோயிலுக்கு கொண்டு செல்வர்.

தென்மாவட்டங்களில் எட்டயபுரம் சந்தைக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்ற மேலப்பாளையம் கால்நடை சந்தையில் பங்குனி உத்திர திருவிழா விற்பனை இன்று களைக்கட்டியது. நெல்லை தென்காசி, தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் மட்டுமின்றி, மதுரை, தேனி, திண்டுக்கல் வியாபாரிகளும் சந்தையில் பங்கேற்று ஆடுகளை வாங்கி சென்றனர். வெள்ளாடு, செம்மறி ஆடு, வேலி ஆடு, பொட்டு ஆடு உள்ளிட்ட பல்வேறு ரக ஆடுகள் விற்பனைக்கு வந்தன. நாட்டு ரக ஆட்டுக்குட்டிகள் ரூ.5000 தொடங்கி ரூ.30 ஆயிரம் வரை மதிப்புள்ள ஆடுகள் சந்தையில் விற்கப்பட்டன. உடல்குவாகு மிகுந்த சில வெள்ளாடுகள் ரூ.25 ஆயிரத்திற்கும் மேல் விலை போயின. பங்குனி உத்திரத்தையொட்டி ஒட்டி செம்மறி ஆடுகளை விட வெள்ளாடுகளை பலர் குறி வைத்து விலை பேசினர்.

மேலப்பாளையம் சந்தையில் இன்று மட்டுமே சுமார் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. நெல்லை மாநகராட்சி சார்பில் 2 ஆயிரத்திற்கு அதிகமான டோக்கன்கள் சந்தையில் ஆடுகளை கொண்டு செல்ல விநியோகம் செய்யப்பட்டன. சந்தை வியாபாரம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பங்குனி உத்திரத்தை ஒட்டி கறியுள்ள ஆடுகள் நல்ல விலைக்கு போகிறது. பொட்டை ஆடுகளை விட, கிடாக்களுக்கு இன்று நல்ல விலை காணப்பட்டது. செம்மறியாடுகள் அதிலும் இரண்டு பல் ஆடுகளுக்கு அதிக விலை சந்தையில் நல்ல விலை காணப்படுகிறது. பங்குனி உத்திரம் என்பதால் வெள்ளாடு, செம்மறியாடுகள் எதையெடுத்தாலும் நேர்ச்சை கிடாக்களுக்கே நல்ல மவுசு இருந்தது’’ என்றனர். பங்குனி உத்திர நாளில் சாமிக்கு சிலர் ஒத்த மாராப்பு, செங்கிடா என நேர்த்தி கடன் செலுத்துவது உண்டு. இதற்காக சந்தைக்கு வந்த சில பக்தர்கள் அத்தகைய கிடாக்களை தேடி பிடித்து அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர்.

Tags : Melapalayam ,Panguni Uthira festival ,Melapalayam market ,Panguni Uthira ,
× RELATED தமிழ்நாட்டில் ஏற்கனவே தேர்தல்...