×

ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் ஈரானை முழுமையாக அழிப்போம்: கார்க் தீவு மீது குண்டுவீசுவதாக அதிபர் டிரம்ப் மிரட்டல்

இஸ்லாமாபாத்: ஹார்முஸ் ஜலசந்தியை உடனே திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக அழிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மேற்கு ஆசியா போர் ஒரு மாதத்தை கடந்து 31வது நாளாக நேற்றும் நீடித்தது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர இருதரப்புக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்கிறது. இதற்காக, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் உச்சி மாநாடு ராவல்பிண்டியில் நேற்று முன்தினம் நடந்தது.

இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இஸ்லாமாபாத்தில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தான் மீது ஈரான், அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் இரு தரப்பினருக்கும் இடையிலோன அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் செய்வோம்’’ என்றார். ஆனால், ஈரானும் அமெரிக்காவும் தொடர்ந்து போரை தீவிரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயின் அளித்த பேட்டியில், ‘‘இருதரப்பினருக்கும் இடையே செய்திகளை பரிமாறும் இடைத்தரகர்கள் மூலம் விவாதங்கள் நடைபெறுகின்றன. அமெரிக்காவின் 15 அம்ச போர் திட்டங்கள் பெரும்பாலும் யதார்த்தமற்றவை, நியாயமற்றவை, வரம்பு மீறியவை. அதை ஏற்க முடியாது. தற்போதைய நிலையில் நேரடி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை’’ என்றார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘‘ஈரானின் உயர்மட்ட அதிகாரிகள் ஒழிக்கப்பட்டு தற்போது நியாயமானவர்கள் கைகளில் அந்நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் பேச்சுவார்த்தை நன்றாக செல்கிறது. விரைவில் ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நான் காண்கிறேன். எங்களின் 15 அம்ச திட்டத்தில் உள்ள பெரும்பாலான கோரிக்கைகளுக்கு ஈரான் ஒப்புக் கொண்டு விட்டது. அவர்கள் தங்கள் அணு ஆயுதங்களை கைவிடுவார்கள். நாங்கள் விரும்புவதை முழுமையாகச் செய்வார்கள். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்களுக்கு என்று ஒரு நாடே இருக்காது’’ என மிரட்டி உள்ளார். மேலும், தரைவழி தாக்குதல் குறித்து அவர் கூறுகையில், ‘‘ஈரானின் கார்க் தீவை நாங்கள் கைப்பற்றலாம். கைப்பற்றாமலும் இருக்கலாம். எங்களுக்கு நிறைய வழிகள் உள்ளன’’ என்றார்.

இதன் பின்னர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர எனது நிர்வாகம் ஈரானுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. இதில் விரைவில் ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈரானில் எங்களது தாக்குதலை பயங்கரமாக முடித்துக் கொள்வோம். அதாவது, ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு, மேலும் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை குண்டுவீசித் தகர்த்து, முழுமையாக அழித்தொழிப்போம்.

இந்த இடங்களைத்தான் நாங்கள் இதுவரை வேண்டுமென்றே கை வைக்காமல் விட்டு வைத்துள்ளோம். ஈரானின் பழைய ஆட்சியின் 47 ஆண்டுகால பயங்கரவாத ஆட்சிக்காலத்தில், அந்த நாடு ஈவு இரக்கமின்றி படுகொலை செய்த எங்களது ஏராளமான வீரர்கள் மற்றும் பிறருக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாவே இது அமையும்’’ என கூறி உள்ளார். ஏற்கனவே ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை குறிவைப்பதாக மிரட்டல் விடுத்த டிரம்ப் பின்னர் அதிலிருந்து பின்வாங்கி அவகாசம் வழங்கி உள்ளார். தற்போது அமெரிக்காவின் படைகள் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டு வரும் நிலையில் டிரம்பின் இந்த புதிய மிரட்டல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

* டிரம்பால் மட்டுமே முடியும்
எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘வளைகுடாவில் நடக்கும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்பால் மட்டுமே முடியும். அவரைத் தவிர வேறு யாராலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியாது. இந்த சண்டையில் அமெரிக்கா தான் தீர்க்கமான செல்வாக்கை கொண்டுள்ளது. இப்போர் நீடித்தால் பிராந்திய ஸ்திரமின்மையை ஆழப்படுத்தி, உலகளாவிய எரிசக்தி சந்தைகள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும்’’ என எச்சரித்துள்ளார்.

அமெரிக்க அதிகாரிகள் வீடுகள் தாக்கப்படும்
ஈரானின் நகரங்களில் உள்ள குடியிருப்புகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய ராணுவ மற்றும் அரசியல் அதிகாரிகளின் வீடுகள் குறிவைக்கப்படும் என ஈரான் ராணுவ செய்தி தொடர்பாளர் இப்ராகிம் ஸோல்பகாரி கூறி உள்ளார்.
* ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க போர் விமானங்களுக்கு தடை விதிக்கும் வகையில், அத்தகைய போர் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடுவதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.
* இஸ்ரேலின் வடக்கு நகரமான ஹைபாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏவுகணை தாக்குதலாலோ அல்லது இடைமறிப்பின் போது சிதறிய பாகங்களாலோ தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டது.
* ஈரான் போர் ஒருமாதத்தை தாண்டி நீடிக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 116 டாலராக நேற்று அதிகரித்தது.

* ஈரான் கடற்படை தலைவர் பலி
ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படை தலைவர் அலிரெசா டங்சிரி கொல்லப்பட்டதை ஈரான் நேற்று உறுதி செய்தது. டங்சிரியை கொன்றதாக இஸ்ரேல் கடந்த 26ம் தேதி கூறியிருந்தது. இதுதொடர்பாக புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில், ‘தீவிர காயம் காரணமாக டங்சிரி அல்லாவின் படையில் சேர்ந்தார். ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள உதவிய அவரது முயற்சிகள் பாராட்டுக்குரியவை’ என கூறி உள்ளது.

Tags : Iran ,Strait of Hormuz ,President ,Trump ,Cork Island ,ISLAMABAD ,US ,OF HORMUZ ,West Asia ,United ,States ,Israel ,
× RELATED ஈரான் மீது தரைவழிப் படையெடுப்பை நடத்த...