×

கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து சசிகலாவுடன் நடிகர் கார்த்திக் திடீர் சந்திப்பு: தென்மாவட்ட வாக்குகளை வளைக்க திட்டம்

 

சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் சசிகலாவை நடிகர் கார்த்திக் சந்தித்து, வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சுமார் 20க்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அதேபோல் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிகள் 14 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்க உள்ளது. சீமான் இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிட உள்ளார். தந்தை – மகன் மோதலால் பாமக இரண்டாக உடைந்துள்ளது. அன்புமணி பிரிந்து சென்று அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறார். ராமதாசோ எந்த கூட்டணியில் இணைய முடியாமல் தவித்து வந்தார்.

அவர் தனித்து போட்டியிடக்கூடிய சூழ்நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா தனக்கு துரோகம் இழைத்தவர்களை பழிவாங்கும் வகையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி தேர்தலில் போட்டியிட களம் இறங்கியுள்ளார். இதற்காக ராமதாசை சந்தித்து புதிய கூட்டணியையும் ஏற்படுத்தியுள்ளார். நீண்ட நாட்களாக கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், யாரும் எதிர்பாரா விதமாக சசிகலா தொடங்கிய புதிய கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

வட மாவட்ட மற்றும் தென் மாவட்டங்களில் இருக்கும் வன்னியர் மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மெஜாரிட்டியாக இருக்கும் முக்குலத்தோர் ஓட்டுகளை இந்த கூட்டணி நிச்சயம் பிரிக்கும் என்று கூறப்படுகிறது. ராமதாஸ் – சசிகலா கூட்டணி வட மற்றும் தென் மாவட்டங்களில் வாக்குகளை கணிசமாக பிரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தனக்கு துரோகம் இழைத்த அதிமுக தலைவர்களின் வெற்றிக்கு பெரும்பாலான பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறார்.

இந்நிலையில் பாமக செயல் தலைவர் காந்தி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் சசிகலாவை சந்தித்துள்ளனர். அதேபோல் நடிகர் கார்த்திக், சசிகலாவை இன்று காலை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்று அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடும் ராமதாஸ்-சசிகலா கூட்டணிக்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். அதோடு, சசிகலா தரப்புக்கு ஆதரவாக கார்த்திக் பிரச்சாரம் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு, அனைத்திந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் கார்த்திக், பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் அந்தக் கட்சியைக் கலைத்து மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தென்மாவட்ட வாக்குகளை வளைக்க திட்டமிட்டுள்ளதாக இந்த புதிய கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Kartik ,Sasikala ,Southern District ,Chennai ,Karthik ,General Secretary of ,People's Development Association ,PWD ,Dimuka ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக...