×

ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கீடு குமரியில் நாளை எடப்பாடி பிரசாரம்: அதிருப்தியாளர்களை சரி கட்ட தீவிரம்

 

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடுகிறது. அந்த கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம் 5வது முறையாக மீண்டும் களமிறக்கப்பட்டு உள்ளார். நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, பத்மநாபபுரம் ஆகிய 4 தொகுதிகள் பாரதிய ஜனதாவுக்கும், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தமாகாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமாகாவும் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால், குமரி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தாமரை சின்னம் களமிறங்கி உள்ளது. அதிமுகவின் இரட்டை இலை சின்னம் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே நிற்கிறது. இதனால் அதிமுகவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். நாகர்கோவில், குளச்சல் சட்டமன்ற தொகுதியை அதிமுக பெரிதாக எதிர்பார்த்து இருந்த நிலையில் அந்த தொகுதிகள் பாரதிய ஜனதாவுக்கு கொடுத்ததால், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கொதிப்படைந்து தற்போதைய மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். தளவாய்சுந்தரத்தை எதிர்த்து கன்னியாகுமரியில் சுயேச்சையாக களமிறங்குவேன் என்றும் கூறினார். மேலும் நாகர்கோவில் தொகுதியிலும் சுயேச்சையாக நிற்பேன் என்றார்.

இதற்கிடையே கடந்த 26ம்தேதி நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்திய சிலர், தளவாய்சுந்தரத்தின் படத்தை கிழித்து கோஷம் எழுப்பினர். மேலும் சென்னையில் நேற்று எடப்பாடி பழனிசாமி வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்களை எடப்பாடி பழனிசாமி கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நாளை எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், அதிமுக அதிருப்தியாளர்கள் போராட்டம் நடத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எடப்பாடி பழனிசாமி பிரசார நிகழ்ச்சி ஆரல்வாய்மொழியில் நடக்கிறது. நாகர்கோவிலில் இருந்து காரில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு செல்லும் வழிப்பாதையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் பிரச்சினை ஏற்படலாம் என்பதால், அதிமுக அதிருப்தியாளர்களை சரிக்கட்டும் வேலைகள் நடக்கின்றன.

Tags : Kumari ,Nagarko ,Kumari district ,Kanyakumari ,M. L. A. Logavazhundaram ,Nagarkovil ,Kulachal ,Vlavangodu ,Padmanapapuram ,
× RELATED சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக...