×

பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி பிரச்சார வாகனங்கள், கூட்டங்கள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை

*கலெக்டர் மிருணாளினி எச்சரிக்கை

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி வாகனங்கள் இயக்குவோர், கூட்டங்கள் நடத்துபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நேற்று தேர்தல் நடத்தை விதி முறைகள், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெற வேண்டிய வழிமுறைகள் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகளுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டத் தேர்தல் அலுவலரான மிருணாளினி தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:

அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மற்றும் பொது கூட்டங்களுக்கான அனுமதி விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 48 மணி நேரத்திற்கு முன்பு SUVIDHA செயலி ( https://suvidha.eci.gov.in/ac/public/login) இணையதளம் வாயிலாக முறையாக விண்ணப்பம் செய்திட வேண்டும்.

சுவர் விளம்பரங்களுக்கு SUVIDHA செயலியின் வாயிலாக அனுமதி வழங்க இயலாது என்பதால் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் எழுத்துப்பூர்வ ஆணையாக அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட விண்ணப்பத்திலேயே பிரச்சாரம், பொது கூட்டங்களில் மேற்கொள்ளப்பட போகும் செலவு திட்டத்தினை இணைப்பு D1ல் வழங்கிட வேண்டும். அனுமதி ஆணையின் அசல் உத்தரவை கைவசம் வைத்திருக்க வேண்டும்.

மேலும் பிரச்சார வாகனங்களில் ஒட்ட வேண்டும். உரிய அனுமதி இன்றி இயக்கப்படும், நடத்தப்படும் அனைத்து பிரச்சார கூட்டங்கள் நடத்துபவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இன்றி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு, தற்காலிக கட்சி அலுவலகம் அமைப்பதற்கு, ஒலிபெருக்கியுடன் பொதுக் கூட்டம் நடத்துவதற்கு, ஒலி பெருக்கி இல்லாமல் பொது கூட்டம் நடத்துவதற்கு,

ஒலி பெருக்கியுடன் தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவதற்கு, ஒலிபெருக்கியுடன் ஊர்வலம் நடத்துவதற்கு, கொடிகள் மற்றும் பதாகைகள் வைப்பதற்கு, ஒரு தொகுதிக்குள் மட்டும் இயக்கப்படும் வாகனங்களுக்கு, மேடை மற்றும் தடுப்பரண்கள் அமைப்பதற்கு அந்தந்த சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும்.

ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேடு அனுமதி, மாவட்டம் முழுவதும் இயக்கப்படும் வாகனங்களுக்கான அனுமதியினை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் பெற வேண்டும். அனைவரும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிகளை முறையாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார் .

இக்கூட்டத்தில் உதவி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்டக் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (தேர்தல்) வேல்முருகன், (பொது) சொர்ணராஜ், (கணக்குகள்) காந்திமதி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அனிதா (பெரம்பலூர்), சக்திவேல் (குன்னம்),

ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கும் அலுவலர் சிவக்கொழுந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பரிமளம், தேர்தல் தாசில்தார் அருளானந்தம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலக தாசில்தார்கள், அனைத்து ஒருங்கிணைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur district ,Mrinalini ,Perambalur ,District Collector ,
× RELATED சேலத்தில் விபத்தில் சிக்கி...