×

வீடுதோறும் அழைப்பிதழ் வழங்கல் வாருங்கள்…ஓட்டு போடுங்கள்…

*கலக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அதிகாரிகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நகராட்சி அலுவலர்கள் வீடுகளுக்கு சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதழ் கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

புதிய வாக்காளர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்பட அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் கமிஷனர் குமார் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பூ ஆகியவற்றுடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் கொடுத்து அவசியம் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் குமார் கூறுகையில், ‘‘ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தேர்தல் நாளன்று அவசியம் வாக்களிக்க வேண்டும் அதை வலியுறுத்தும் விதமாக அவர்களது வீடுகளுக்கே சென்று தேர்தல் திருவிழா அழைப்பிதழை கொடுத்து வருகிறோம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் உள்ள 33 வார்டுகளுக்கும் சென்று இவர்களை சந்தித்து 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என தெரிவித்தார். உடன் நகர அமைப்பு அலுவலர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.

Tags : Srivilliputhur ,Tamil Nadu ,Election Commission ,
× RELATED சேலத்தில் விபத்தில் சிக்கி...