- காங்கிரஸ்
- புதுச்சேரி
- தேர்தல் ஆணையம்
- தேஜா கூட்டணி
- NR காங்கிரஸ்
- பாஜக-
- அஇஅதிமுக
- எல்ஜ்கே
- இடங்கள்
- இந்தியா கூட்டணி
- திமுக
- விஜேக்கே
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேஜ கூட்டணியில் என்ஆர் காங்., – 16, பாஜ-10, அதிமுக-2, எல்ஜேகே-2 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதேபோல், இந்தியா கூட்டணியில் காங்., – 16, திமுக-13, விசிக-1 என வேட்பு மனு தாக்கலுக்கு பிறகே தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டது. அதற்கு முன்பே 14 தொகுதிகளில் காங்கிரஸ், திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட முத்தியால்பேட்டை, மண்ணாடிப்பட்டு, இந்திரா நகர், அரியாங்குப்பம், ஏம்பலம், நெட்டப்பாக்கம் ஆகிய 6 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் ஏ, பி படிவம் இன்றி மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் அவர்களது மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
இதுபோன்று காங்கிரஸ் சார்பில் கதிர்காமம், நிரவி ஆகிய 2 தொகுதியில் ஏ, பி பார்ம் இல்லாததால் அவர்களது மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால், திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட காலாப்பட்டு, நெல்லித்தோப்பு, ராஜ்பவன், திருபுவனை, மங்கலம், காரைக்கால் தெற்கு ஆகிய 6 தொகுதிகளில் ஏ, பி படிவத்துடன் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று நெல்லித்தோப்பு தொகுதியில் மட்டும் காங்., வேட்பாளர் ஆனந்தபாபு வாபஸ் பெற்றார். மீதமுள்ள 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வாபஸ் பெற மறுத்துவிட்டனர். இதையடுத்து நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் திமுக போட்டியிடும் 5 தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
மேலும், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட உழவர்கரை தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதனால் உழவர்கரை, ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிடுகிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் காங்கிரசும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதேபோல், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும், உருளையன்பேட்டை தொகுதியில் மதிமுகவும் தனித்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன. தேமுதிக, மதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது மனுக்களை நேற்று வாபஸ் பெற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தொகுதியும் ஒதுக்காததால், அவர்கள் உழவர்கரை, தட்டாஞ்சாவடி என இரு தொகுதியில் தனித்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியில் சலீம் மனுவை வாபஸ் பெற்றார். உழவர்கரை தொகுதியில் மட்டும் இந்திய கம்யூ., தனித்து போட்டியிடுகிறது. இங்கு காங்., சார்பில் சிவசங்கர் எம்எல்ஏ, இந்திய கம்யூ., சார்பில் முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், விசிக சார்பில் புஷ்பலதா என ஒரே கூட்டணியை சேர்ந்த 3 பேர் தனித்து களத்தில் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முத்தியால்பேட்டை, லாஸ்பேட்டை, பாகூர், திருபுவனை ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் முத்தியால்பேட்டை, பாகூர் ஆகிய இரு தொகுதிகளில் வாபஸ் பெற்றனர். தற்போது லாஸ்பேட்டையில் காங்., சார்பில் வைத்தியநாதன், சிபிஎம் சார்பில் முன்னாள் செயலாளர் ராஜாங்கம் ஆகியோரும், பாகூர் தொகுதியில் திமுக சார்பில் அங்காளன் எம்எல்ஏ, காங்., சார்பில் வேலு, சிபிஎம் சார்பில் தட்சணாமூர்த்தி ஆகியோரும் ஒரே கூட்டணியில் தனித்து போட்டியிடுகின்றனர்.
திருபுவனை தொகுதியில் திமுக சார்பில் அங்காளன் எம்எல்ஏவுக்கு எதிராக காங்., வேட்பாளர் வேலு போட்டியிடுகிறார். இதேபோல், காரைக்கால் தெற்கு தொகுதியில் திமுக அமைப்பாளர் நாஜிம் எம்எல்ஏ போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் மகன் ஏ.வி.எஸ்.சக்திவேல் பிரபு களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 442 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் 77 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 71 பேர் வாபஸ் பெற்றனர். இறுதியாக மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்களை பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வெளியிட்டு, சுயேச்சைகளுக்கு சின்னங்களை ஒதுக்கிவிட்டது.
