சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சீட் எதிர்பார்த்து சென்னையில் தலைவர்கள் முகாமிட்டுள்ளனர். அதே நேரத்தில் யாருக்கு சீட் கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பில் தொண்டர்கள் இருந்து வருகின்றனர். பெயர் பட்டியல் வெளியிட்டவுடன் உடனடியாக பிரசாரத்தில் ஈடுபடவும் வேட்பாளர்கள் தீவிரமாகி வருகின்றனர். தமிழக சட்டசபையின் 234 தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற 30ம் தேதி தொடங்க உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. திமுகவை பொறுத்தவரை இந்த தேர்தலில் மெகா கூட்டணியை அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை என்பது சமூகமாக முடிந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் 28 தொகுதிகள், தேமுதிக 10, விசிக 8 இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு தலா 5 தொகுதிகள், மதிமுக 4 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம் கூட்டணி கட்சிகளுக்கு 66 தொகுதிகள் ஓதுக்கப்பட்டுள்ளது. இதே போல எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை என 3 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் 175 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. தொடர்ந்து கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் எவை என்பது தொடர்பாக காணப்பட்டுள்ளது.
திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் அதனை ரெடி செய்து திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர். கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எந்த நேரத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி உள்ளது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் போக மீதியுள்ள தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக இந்த வாரம் இறுதிக்குள் வெளியிடும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து தேர்தல் அறிக்கையையும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் உடனடியாக வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்கவும் அந்தந்த கட்சிகள் தயாராக உள்ளது. தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல் பறக்கும் சூறாவளி தேர்தல் பிரசாரத்தை வரும் 2ம் தேதி முதல் தொடங்க உள்ளார். தொடர்ந்து 21ம் தேதி அவர் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்ய உள்ளார். அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜவுக்கு 27, பாமக 18, அமமுக 11, தமாகா 5, ஐஜேகே 2, தமமுக 1, புரட்சி பாரதம் 1 தொகுதி என மொத்தம் கூட்டணி கட்சிகளுக்கு 65 இடங்களை அதிமுக ஒதுக்கியுள்ளது.
இதில் பாஜ, தமாகா ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. பாமக மாம்பழம் சின்னத்திலும், அமமுக குக்கர் சின்னத்திலும் போட்டியிடுகிறது. புரட்சி பாரதம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 169 இடத்தில் அதிமுக நேரடியாக களம் காண்கிறது. புரட்சி பாரதத்தையும் சேர்த்தால் 170 இடங்களில் அதிமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிமுக போட்டியிடும் 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் அமைச்சர்கள் அவர்கள் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர். எடப்பாடி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். மீதியுள்ள தொகுதிகளில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற விவரத்தை எடப்பாடி ஓரிரு நாளில் வெளியிட உள்ளார். இதே போல பாஜ, பாமக, அமமுக, தமாகா போட்டியிடும் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அவர்களும் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.
இதே போல தவெகவும் வருகிற 29ம் தேதி 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் சென்னையில் வெளியிட உள்ளார். இதே போல நாம் தமிழர் கட்சியின் சீமான், 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த நிலையில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், முக்கிய தலைவர்கள் தங்களுக்கு தான் சீட் கிடைக்கும் என்று சென்னையில் முகாமிட்டுள்ளனர்.
அவர்கள் தங்களுக்கான தலைவர்களை அணுகி சீட்டுக்காக காத்திருந்து வருகிறார்கள். அதே நேரத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணியில் யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட போகிறார்கள் என்ற எதிர்ப்பாப்பு தொண்டர்களிடமும் தொற்றியுள்ளது. அவர்களும் தங்கள் தொகுதிக்கு யார் வேட்பாளர்களாக வருவார்கள் என்று எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்து வருகிறார்கள். வேட்பாளர்கள் அறிவித்ததும் உடனடியாக தொகுதிகளில் வேலையை தொடங்கவும் சீட் கிடைத்தவர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், வரும் நாட்களில் தேர்தல் களம் மேலும் அனல் பறக்கும். பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
